இளையராஜா பாடல்களை பாட காப்புரிமை தொகை பட்டியல் நிர்ணயம்

இசை ஞானி என அழைக்கப்படும் பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்களை, அனுமதியில்லாமல் தொழில்முறையாக பாடுபவர்கள் காப்புரிமை வழங்க வேண்டும் என அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து யார்? யார்?  எவ்வளவு காப்புரிமை தொகை செலுத்த வேண்டும்? என்ற பட்டியலை, இளையராஜா வெளியிட்டு உள்ளார்.
இதன்படி, சம்பளத்தின் அடிப்படையில் பாடகர்கள் அனைவரும் A,B,C என 3 வகையாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சித்ரா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோர், ஏ பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 2 பிரிவுகளிலும் அவர்களை விட சிறிய பாடகர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
அந்த வகையில், வெளிநாட்டு கச்சேரிகளில், இளையராஜா பாடல்களைப் பாடும் “ஏ” பிரிவு பாடகர்கள் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதேபோல, “பி” பிரிவினருக்கு 15 லட்ச ரூபாயும், “சி” பிரிவினருக்கு 10 லட்ச ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாடுகளில் நடைபெறும் கச்சேரிகளில் பாட 75 ஆயிரம் ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பாடுபவர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். இதேபோல ஹோட்டல்களில் இளையராஜாவின் பாடல்களை பாடும், பாடகர்கள் முப்பதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்த பட்டியலின் படி, காப்புரிமை தொகையை வசூல் செய்யும் அதிகாரம், தமிழ் இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைக்கும் வருவாயில், 80 சதவீதம் இளையராஜாவிற்கும், 20 சதவிதம் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இளையராஜாவின் பாடல்களுக்கு காப்புரிமை தொகை நிர்ணயித்திருப்பது நியாயமான நடவடிக்கை என அவரது வழக்கறிஞர் பிரதீப் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *