தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

0
32

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க விஷால் முயற்சி செய்த போது காவல் துறையினர் தடுத்ததால் பரபரப்பு உண்டாகியது. பின்னர் விஷால் கைது செய்யப்பட்டார்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி, தி.நகர் மற்றும் ஜெமினி மேம்பாலத்துக்கு அருகே உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிரணி பூட்டுப் போட்டது. இதனால், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

எதிரணியைச் சேர்ந்த ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதல்வரை இன்று (டிசம்பர் 20) சந்திக்கவுள்ளார்கள். இந்நிலையில், எதிரணியினர் போட்ட பூட்டை விஷால் காலை 11 மணியளவில் உடைத்து உள்ளே செல்வார் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேட்டியளித்தனர். அப்போதிலிருந்தே பரபரப்பு உண்டானது.

தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 11 மணியளவில் சென்ற விஷால், “இந்தச் சங்கத்துக்கு நான் தான் தலைவர். என்னோட அலுவலகத்துக்கு இன்னொருவர் பூட்டு போட்டுள்ளார். அதை உடைத்து உள்ளே செல்ல வேண்டும். மற்றொருவர் போட்ட பூட்டுக்கு ஏன் இவ்வளவு பேர் பாதுகாப்புக்கு நிற்கிறீர்கள் என்று தெரியவில்லை” என்று காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், பூட்டை உடைத்தே தீருவேன் என்று சொல்லியுள்ளார் விஷால். இதனால் தி.நகர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. மேலும், காவல்துறையினர் அனுமதி மறுக்கவே தொடர்ச்சியாக விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here