நடிகர் ஜெய் சங்கர் இப்படிப்பட்டவரா…?

ஜெய் சங்கரை பற்றி நாம் அறிந்திடாத பல விஷயங்கள்

எம்ஜிஆரும், சிவாஜியும் பெரிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்ட காலகட்டத்தில், சின்ன பட்ஜெட்டில் நாமும் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு காமதேனுவாக காட்சியளித்தவர் ஜெய்.

அதுமட்டுமல்ல,
சினிமா என்பது ஒரு இண்டஸ்ட்ரி. இதில் ஹீரோ, ஹீரோயின்கள், குணச்சித்ர நடிகர்கள், நகைச்சுவை நடிக, நடிகையர், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள்,
துணை நடிகர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஸ்டண்ட் நடிகர்கள்,
நடன ஆசிரியர்கள், நடனமணிகள், எடிட்டர்கள், பிராசஸ்ஸிங் லேப் தொழிலாளர்கள் என எண்ணற்ற பிரிவில் பல்லாயிரக்கணக்கானோர் சினிமாவை நம்பி வாழ்கிறார்கள்.

எம்ஜிஆரும், சிவாஜியும்
அதிகமாகப் போனால் 3, 4 படங்களே வருஷத்துக்கு நடிக்க முடியும் என்னும் போது இத்தனை தொழிலாளர்கள் குடும்பம் வயிறு கழுவ நிறைய பேர் படங்கள் தயாரித்தாக வேண்டும். இதில் ஓன்றிரண்டு படங்கள் எடுத்து தொடர்ந்து நஷ்டமானால் அந்தத் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் காஸ்ட்யூமர், மேக்கப்மேன், புரொடக்ஷன் மேனேஜர் போன்றோரையெல்லாம் தயாரிப்பாளர் ஆக்கியவர் ஜெய்.

பெரிய பட்ஜெட் படம், பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டிய கதையெல்லாம் வேண்டாம்.

3 லட்சம், 4 லட்சம் ரூபாயில் ஒரு படத்தை முடிக்கிற அளவுக்கு, அளவான கதை
விஜயா கார்டனில் 3 பாட்டையும் படமாக்கி விடலாம் என்ற அளவில் பட்ஜெட் போட்டு,
அதற்கு வாகான கதாநாயகி, வில்லன்களை நடிக்க வைத்து 30 நாளில் படம் முடிக்கும் அளவுக்கு பல தயாரிப்பாளர்களை உருவாக்கினார் ஜெய்.

படம் முடிந்து வியாபாரம் முன் பின் ஆகி, சில ஆயிரங்கள் லாபம் வந்தாலும், அதே தயாரிப்பாளருக்கு அடுத்த படத்துக்குத் தேதி கொடுத்தார்.
பேசிய சம்பளத்தில் கால் பகுதிதான் கொடுத்திருப்பார்கள்.
மற்ற நடிகர், நடிகையருக்கு செட்டில் பண்ணி, டைரக்டர், கேமராமேனுக்கு செட்டில் பண்ணி மீதி இருந்தா எனக்குக் கொடு என்பார்.
அவர் முழுச் சம்பளமும் வாங்கிய படங்கள் 10-20 கூட இராது.

ஒரு கதாசிரியன் சிரமப்பட்டால் ஒரு கம்பெனியில் அவரை எழுதவைப்பார்.

ஒரு டைரக்டர் சிரமப்பட்டால் ஒரு தயாரிப்பாளரைக் கை காட்டுவார். இப்படி அவர் படங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்ததா என்பதை விட, பல குடும்பங்களில் விளக்கெரியக் காரணமாக இருந்தார்.

தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று ஷான்கானரி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹாலிவுட்டில் கலக்கிய காலத்தில் இங்கு ஜெய் பேர் வாங்கினார்.
ஒளிப்பதிவாளர், கர்ணனும்,
மாடர்ன் தியேட்டர்ஸாரும் – ராபின்ஹூட் பாணி, டிடெக்டிவ் ஹீரோவாக ‘ஜம்பு’, ‘கங்கா’, ‘காலம் வெல்லும்’, ‘எங்க பாட்டன் சொத்து’ என்று கர்ணனும் – ‘சி.ஐ.டி சங்கர்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘வல்லவன் ஒருவன்’ என்ற தலைப்புகளில் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமும், ஸ்டண்ட் படங்களைத் தொடர்ந்து எடுத்து ஜெய் நிரந்தரமாய் ஹீரோவாக நிலைக்க உதவினார்கள்.

ஜெய் பெயரைச் சொன்னால் ‘குழந்தையும் தெய்வமும்’, ‘பட்டணத்தில் பூதம்’, ‘முகூர்த்தநாள்’, ‘உயிரா மானமா?’, ‘பூவா தலையா?’, ‘நூற்றுக்கு நூறு’, ‘குலமா குணமா’, ‘சூதாட்டம்’, ‘துணிவே துணை’ போன்ற கதையம்சம் உள்ள படங்களும் அவரது பட்டியலில் உண்டு என்று அவரது ரசிகர்கள் அறிவார்கள்.

தயாரிப்பாளர், கதாசிரியர்களுக்கு மட்டும் அவர் உதவி செய்யவில்லை. மெர்சி ஹோம் என்ற அனாதை இல்லத்தை தத்து எடுத்துக் கொண்டார்.

தன்னுடைய பிறந்த நாள், மற்ற நடிகர்களின் பிறந்த நாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு உணவும், உடையும் வழங்கி அவர்கள் முகத்தில் சிரிப்பு மலர்வதை ரசிப்பார்.

நடிகர்களுக்கு அமைதியான, இனிமையான குடும்ப வாழ்க்கை அமைவது இறைவன் கொடுத்த வரம். பெற்றோர் பார்த்த கீதாவையே மணந்துகொண்டு இரண்டு ஆண் வாரிசுகள், ஒரு பெண் வாரிசுக்குத் தந்தையானவர்.

எதிலும் விரைவும், வேகமும் காட்டும் ஜெய் இவ்வுலகை விட்டுப் போவதிலும் வேகம் காட்டி 61 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்தது தான் மறக்க முடியாத
வேதனை…..

Interview Imsaigal Clik Here

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here