துப்பாக்கி முனை – ஒரு பார்வை

ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே ‘துப்பாக்கி முனை’.

ராமஸ்வரம் தீவில் 15 வயது சிறுமியை  ஆசாத் (‘மிர்ச்சி’ ஷா) என்கிற மாவோயிஸ்ட் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆசாத்தை என்கவுன்ட்டர் செய்வதற்காக போலீஸ் அதிகாரி  போஸ் (விக்ரம் பிரபு)  மும்பையிலிருந்து ராமேஸ்வரம் விரைகிறார். கொலையான சிறுமியின் தந்தை உய்யா (எம்.எஸ்.பாஸ்கர்) விக்ரம் பிரபுவிடம் நடந்தது என்ன? என்பதைச் சொல்கிறார். கோபமும் வேகமுமாக கிளம்பும் விக்ரம் பிரபு என்கவுன்ட்டர் செய்யாமல் அவரைக் காப்பாற்றப் போராடுகிறார். அது ஏன்? சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்துக்கு யார் காரணம்? துப்பாக்கி தோட்டாக்களில் மட்டுமே பேசும் விக்ரம் பிரபு ஏன் முதன்முறையாக ஒரு குற்றவாளிக்காக மனம் இரங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

விக்ரம் பிரபு இதற்கு முன்பு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற கதாபாத்திரத்துக்குப் பக்காவாகப் பொருந்துகிறார். பார்க்கிற இடங்களில் எல்லாம் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ளும் முரட்டு அதிகாரிக்கே உரிய கம்பீரத்தையும், மிடுக்கையும் சரியாக வெளிப்படுத்துகிறார்.  அம்மாவின் அன்புக்காக ஏங்குவதும், தான் செய்வது தவறில்லை. இதுவும் ஒரு அறம் தான் என்பதைப் புரிய வைப்பதுமாக படம் நெடுக பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார்.

நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஹன்சிகாவைப் படத்தில் பார்க்க முடிகிறது. கதாநாயகிக்கு உரிய அம்சங்களில் ஹன்சிகாவின் கதாபாத்திரம் கட்டமைக்கப்படவில்லை. முக்கியத் திருப்பங்களுக்கு அவர் பயன்பட்டாலும் குணச்சித்திரக் கதாபாத்திரமாகவே அமைந்துவிடுகிறது.

நானும் படத்துல இருக்கேன் என்று அட்டெனென்ஸ் போட்டிருக்கிறார் ஆடுகளம் நரேன். நீ பண்ண தப்புக்கு மரணம் தான் தண்டனை என்று தாதா ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்த வேல ராமமூர்த்தி அவசரப்பட்டு விபரீத முடிவை எடுக்கிறார். அது நம்பும்படியாகவும் இல்லை. ஆசாத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மிர்ச்சி’ ஷா அப்பாவியான நடிப்பில் மனதை அள்ளுகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் மகளை இழந்த தகப்பனின் தவிப்பைக் கண்முன் நிறுத்துகிறார். எங்கேயாவது ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் வெட்கப்பட்டு தலைகுனியணும் என்று தழுதழுத்த குரலில் சொல்லும்போது கண்ணீரை வரவழைக்கிறார்.

ராசாமதி சென்னை, கோவா, மும்பை, ராமேஸ்வரம் என்று கதைக்குத் தேவையான நிலப்பரப்பை கண்களுக்குள் கடத்துகிறார். ராமேஸ்வரம் தீவு குறித்த காட்சிகளில் வசீகரிக்கிறார். முத்து கணேஷின் இசையில் யார் இவன், பூவென்று சொன்னாலும் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை படத்தின் முக்கிய இடங்களில் பலமாகவும், சில காட்சிகளில் ஒத்திசைவாக இல்லாமல் துருத்திக்கொண்டும் உள்ளது. புவன் சீனிவாசனின் படத்தொகுப்பின் நேர்த்தி படத்தின் டெம்போவைக் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

”நாம சாப்பிடுற அரிசியில நம்ம பேரு இருக்குறது உண்மைன்னா, என் துப்பாக்கியில இருக்குற ஒவ்வொரு தோட்டாவுலயும் குற்றவாளியின் ஜாதகம் இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஆனா, அந்த நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட ஒரு கேஸ் இது”, ”கோர்ட்டுக்கும் நேரமில்லை. துப்பாக்கிதான் கோர்ட்டு, தோட்டாதான் தீர்ப்பு” போன்ற வசனங்கள் மூலம் இயக்குநர் தினேஷ் செல்வராஜ் கவனிக்க வைக்கிறார்.

விக்ரம் பிரபு அம்மாவிடம் தன் அன்பைப் புரியவைக்க 5 ஆண்டு காலம் தேவையா, அவரின் கையில் இரு விரல்கள் எப்படி துண்டானது, ஒரு போலீஸ் அதிகாரி என்கவுன்ட்டர் செய்யப்போவது பொதுமக்களுக்குத் தெரியும்படியா காவல்துறை செயல்படும், டெல்லி வரை செல்வாக்கு இருக்கும் வேல ராமமூர்த்தி மகனைக் காப்பாற்ற பெரும் முயற்சிகள் ஏதும் எடுக்காமல் வாய்ச்சவடால் மட்டும் விடுவாரா போன்று சில கேள்விகள் எழுகின்றன.

நாயகன் விக்ரம் பிரபுவுக்கு படத்தில் இருவிதமான நோக்கங்கள் உள்ளன. ஒன்று மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்ட மிர்ச்சி ஷாவைக் காப்பாற்ற வேண்டும். மற்றொன்று உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன்பு தண்டிக்க வேண்டும். படம் முழுக்க குற்றவாளிகளை தன் தோட்டாக்களுக்குப் பலியாக்கும் விக்ரம் பிரபு ஏன் அந்த 4 குற்றவாளிகளை நெருங்கவோ, தேடவோ, தண்டிக்கவோ செய்யாமல் ஒதுங்கிக் கொள்கிறார். அந்த பிரதான வேலையை எம்.எஸ்.பாஸ்கர் செய்வதால் இரண்டாம் பாதியின் மொத்த கிரெடிட்டும் அவருக்கே போய் சேர்கிறது. இதனால் விக்ரம் பிரபு கதாபாத்திரத்துக்கான நோக்கம் முழுமையடையாமல் போகிறது.

படத்தில் காதல், டூயட் என்று இயக்குநர் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாதது ஆரோக்கியமான அம்சம். வடமாநிலத் தொழிலாளர்கள் என்றாலே குற்றப் பின்னணி உடையவர்கள் என்று போலியாகக் கட்டமைக்கப்படும் பிம்பத்தை இயக்குநர் தகர்த்திருப்பது அவரின் பொறுப்புண்ர்வைக் காட்டுகிறது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை குறித்தும், அப்படி வன்முறை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு மரணம் சிறந்த தீர்வாகாது என்பது குறித்தும் அக்கறை விதைத்த விதத்தில் இயக்குநர் தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’ முயற்சியை வரவேற்கலாம்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை16th Chennai International Film Festival Inauguration Stills
அடுத்த கட்டுரைAdutha Saattai Movie Pooja Stills

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here