விஷ்ணு விஷாலின் ‘எஃப் ஐ ஆர்’

சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் என இத்தனை பேர் நடிக்க இருக்கின்ற படம்தான் எஃப் ஐ ஆர்’. குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘அடங்கமறு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘எஃப் ஐ ஆர்’ படத்தில் மீண்டும் தயாரிப்பாளராக தடம் பதித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’, போன்ற பல படங்களில், தலைமை இணை இயக்குனர் – நிர்வாக தயாரிப்பாளர் என்று பல பொறுப்புகளில் முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதுமட்டுமில்லாமல் ‘வெண்ணிலா கபடி குழு’ ‘இன்று நேற்று நாளை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘ஜீவா’, ‘நீர்பறவை’, ‘முண்டாசுபட்டி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தன்னுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த விஷ்ணு விஷால், முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தில் இப்படத்தின் ஹீரோவாக நடிக்கின்றார். இப்படத்தின் ஹீரோயின்களாக மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர்.

சென்னையில் வசிக்கின்ற ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூறமுடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்வு அவரினுடைய வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் இந்த அதிரடி-திகில் படம், நடப்பிலிருக்கும் இன்றைய காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் உருவாகிறது.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அமான், பிரவீன் குமார், மாலா பார்வதி, RNR மனோகர், ஷப்பீர், கெளரவ் நாராயணன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ராகேஷ் பிரம்மானந்தன், பிரவீன் K நாயர், பிரஷாந்த் (itisprashanth), வினோத் கைலாஷ், R ஷ்யாம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பி சி ஸ்ரீராமின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவரும், ‘கிருமி’ புகழ் ஒளிப்பதிவாளருமான அருள் வின்சென்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். குறும்படங்கள், இணைய தொடர்கள், திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் இயங்குகின்ற இசையமைப்பாளர் அஷ்வத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு பொறுப்புகளை ஏற்க, ஆடை வடிவமைப்பு பூர்த்தி பிரவீன் வசமும், சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வரவிருக்கும் இப்படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here