‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. –  துல்கர் சல்மான்

மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவரது நடிப்பில் தயாரான ‘சீதா ராமம்‘ எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

ஸ்வப்னா சினிமா என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தயாரித்து, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியாகும் திரைப்படம் ‘சீதா ராமம்’. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் சென்னை, ஹைதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம், விஜயவாடா என பல நகரங்களுக்கு பட குழுவினர் சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இதன் போது நடிகர் துல்கர் சல்மான் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பேச்சுக்களின் தொகுப்பு…

உங்கள் முந்தைய படங்களை ஒப்பிடும்போது ‘சீதா ராமம்’ படத்தின் சிறப்பம்சம் என்ன?

‘சீதா ராமம்’ ஒரு அசலான கதை. உண்மை கதையில் இது போன்ற கிளாசிக்கலாக அமைவது அரிது. இப்படி ஒரு கதை உலகில் எங்கும் இதற்கு முன் வரவில்லை. திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். தற்போது வெளியாகியிருக்கும் முன்னோட்டத்தில் நீங்கள் பார்த்தது குறைவு தான். பெரிய திரையில் அதை நீங்கள் ரசித்து அனுபவிக்க வேண்டும்.

‘சீதா ராமம்’ படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் அற்புதமான ஆல்பத்தை அளித்திருக்கிறார். படத்தின் இசை நன்றாக இருக்கும் என்று கதையை கேட்கும்போதே புரிந்து கொண்டேன். காஷ்மீரில் படப்பிடிப்பில் ‘காணுன்னா கல்யாணம்..’ என்ற பாடல் படமாக்கப்படும்போது இந்தப் பாடல் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் என்பது புரிந்தது. எல்லா பாடல்களுமே காட்சி வழியாக அற்புதமானவை தான். பின்னணி இசையும் அற்புதம். இந்த ஆல்பத்தில் ‘காணுன்னா கல்யாணம்..’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

தயாரிப்பு நிறுவனத்துடனான உங்களது தொடர்பு குறித்து..?

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா  எனக்கு குடும்பம் போன்றது. தயாரிப்பாளர் அஸ்வினி தத்தை ஒரு நல்ல மனிதராக நான் விரும்புகிறேன். அவர் எனக்கு மிகவும் பிடித்த நபர். எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்து அன்பும், பாசத்தையும் அதிகம் காட்டுபவர். அவர் சிறந்ததை மட்டுமே தேர்ந்தெடுப்பார் என்பதை இந்த படத்தின் மூலமும் உறுதி செய்திருக்கிறார்கள். இயக்குநர் ஹனு ராகவபுடி மிக அருமையான கதையை நேர்த்தியாக எடுத்திருக்கிறார்.

சீதையை பற்றி..?

ஒரு உன்னதமான நாவலை படிக்கும் போது சில கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம். ‘சீதா ராமம்’ படத்தின் கதையைக் கேட்டதும், சீதையின் வேடத்தை கற்பனை செய்து பார்த்தேன். மிருணாள் தாகூர் இந்த பாத்திரத்தில் வந்தபோது மிகச்சிறந்த தேர்வாக தோன்றியது. படப்பிடிப்பு தளத்தில் மிருணாளை பார்த்தபோது அவரைத் தவிர வேறு யாராலும் சீதையாக நடித்திருக்க இயலாது என்பதை உணர்ந்தேன். அவருடைய கதாபாத்திரம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தளத்திலும், மிருணாள் தாகூர் மகிழ்ச்சியான நபராகவே வலம் வந்தார்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரஷ்மிகா மந்தானா குறித்து..?

இந்தப் படத்தில் புதிய ரஷ்மிகாவை பார்ப்பீர்கள். அவர் இதற்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. ‘சீதா ராமம்’ படத்தின் கதையை நகர்த்தி செல்லும் அற்புதமான ஆற்றல் ராஷ்மிகா கதாபாத்திரத்திடம் உள்ளது.

ரசிகர்களின் வரவேற்பு குறித்து..?

சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா என எங்கு சென்றாலும் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பு ஆச்சரியத்தை அளித்தது. கடந்த முறை ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது, சிலர் என்னிடம் உங்களுடைய நடிப்பில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் நன்றாக இருந்தது. உங்களுடைய நடிப்பும் நன்றாக இருந்தது என பாராட்டிய போது ஆச்சரியமாக இருந்தது. பல்வேறு டிஜிட்டல் தளங்களில் எனது படங்களை பார்த்து, திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது என்னை மகிழ்ச்சி அடைய வைத்தது. ரசிகர்களின் எதிர்பாராத வரவேற்பால் நான் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தேன்.

‘சீதா ராமம்’ படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்து..?

‘சீதா ராமம்’ படத்தில் தெலுங்கு, தமிழ், பெங்காலி என பல்வேறு மொழிகளில் திறமை வாய்ந்த நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தருணங்கள் அனைத்தும் அற்புதமான அனுபவத்தை வழங்கியது. கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

நடிகராக இல்லாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள்?

பல தருணங்களில் எனக்கும் இப்படி ஒரு குழப்பமான எண்ணம் ஏற்படும். நான் முதுநிலை வணிக நிர்வாக பட்டதாரி என்பதால், ஒருவேளை முதலீட்டாளராக இருந்திருக்கலாம். எப்போதும் என்னுடைய வாழ்வில் என் தந்தை தான் எனக்கு ஹீரோ. அவரை பெருமைப்படுத்துவது எனது கடமை. நாங்கள் வீட்டில் திரைப்படம் மற்றும் கதைகளை பற்றி விரிவாக பேசுகிறோம். என் கதைகளை ஒற்றை வரியில் சொல்கிறேன். நான் என் தந்தையின் தீவிர ரசிகன்.

திரைப்படங்களை இயக்கும் திட்டமிருக்கிறதா..?

தற்போது நேரமில்லை. ஆனால் எதிர்காலத்தில் படங்களை இயக்கும் எண்ணமிருக்கிறது. எனது இயக்கத்தில் ஒரு படம் தயாராகி வந்தால், அது பார்வையாளர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here