‘நண்பகல் நேரத்து மயக்கம் ‘ – ஜனவரி 26ஆம் தேதி தமிழகத்தில் வெளியீடு

மம்மூட்டி, ரம்யா பாண்டியன், அசோகன், பூ ராமு, ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம். கடந்த ஜனவரி 19 அன்று கேரள மாநிலத்தில் வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்தும், இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் மம்மூட்டி பேசியுள்ளார்.

“இது தமிழ், மலையாளம் என்ற மொழிகளைத் தாண்டிய படைப்பு. கேரளாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கியிருந்தாலும், பெரும்பாலான படத்தின் வசனங்கள் தமிழிலேயே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் பின்னணி இசைக்கு பதிலாக, பிரபலமான பழைய க்ளாஸிக் தமிழ் திரைப்படங்களின் பாடல்களும், வசனங்களுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரம்யா பாண்டியன், பூ ராம், நமோ நாராயணா, ராமச்சந்திரன் துரைராஜ் என படத்தில் தமிழ் நடிகர்கள் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கும்பகோணம் பக்கம் ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது கிராம மக்கள், நடிகர்கள் என அனைவரும் ஒன்றாக பேசிப், பழகி, உணவருந்தி குடும்பம் போலவே இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்டவுடன் இதைத் தவற விடக்கூடாது என்று எனக்கு தோன்றிவிட்டது. கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என மம்மூட்டி கூறியுள்ளார்.

மேலும், ஓடிடி வருகைக்கு பிறகான மக்களின் ரசனை, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடனான நட்பு, ஒரு படம் ஓடுமா ஓடாதா என்பது குறித்து முன்னரே கணிப்பது என இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை மம்மூட்டி இந்தச் சிறிய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *