அன்பே சிவம் படத்தில் கமல் ஒரு வசனம் சொல்லுவார் ” அந்த மனசு தான் சார் கடவுள்” என்று அதற்கு ஏற்றார் போல் நடந்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக திரையுலகம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ரூ. 5000 கோடிக்கும் அதிகமான இழப்புகள் மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2 மாதங்களாக வெளிவரவேண்டிய திரைப்படங்களும் அப்படியே முடங்கியுள்ளன. மீண்டும், திரையரங்குகள், மால்கள், என மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடி திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடுவது என்பது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமாகலாம் எனக் கூறப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு, தயாரிப்பாளர்-நடிகர் ஜே. சதீஷ்குமார், தொழில்துறை மீண்டும் முன்னேற, அதன் மேம்பாட்டிற்காக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் ஊதியக் குறைப்புக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆலோசனையை முன்வைத்தார். இருப்பினும், ஒரு சில தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிநிறுத்தம் காரணமாக அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதால் இது சாத்தியமற்றது என்று கருதினர்.

ஆனால், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி முதல் நடிகராக தனது சம்பளத்திலிருந்து 25% சம்பளக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டார். அதாவது, அடுத்ததாக வெளிவரவிருக்கும் தனது மூன்று திரைப்படங்களான அக்னி சிறகுகள், காக்கி மற்றும் தமிழரசன் ஆகிய திரைப்படங்களுக்கான சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார். அவரின் இந்த சைகை திரைப்பட சகோதரத்துவத்தால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாணும் விஜய் ஆண்டனியின் இதே வழியைப் பின்பற்ற முடிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு தனது சம்பளத்தில் 25% குறைத்ததற்காக விஜய் ஆண்டனி சாருக்கு தலைவளங்குகிறேன். இதனை செய்வது மிகப்பெரிய விஷயம். நானும் அவரைப் பின்பற்றுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது தனிப்பட்ட அறிக்கையில் “இது ஒரு முக்கியமான சூழ்நிலை, தொழில்துறையில் உள்ள அனைவரும் ஒரு குடும்பமாக செயல்பட வேண்டும் மற்றும் அபாயகரமான புயல்களுக்கு மத்தியில் கப்பலை பயணிக்க வேண்டும். எதிர்பார்த்ததை விட விரைவில் நிலைமை சாதாரணமாகி, முன்பு போலவே தொழில் மீண்டும் செயல்படத் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்” என்றும் நம்பிக்கை கூறியுள்ளார்.
சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!






























