வீரவணக்கம் படத்தில் கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் ‘வீர வணக்கம்’. பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில் சமுத்திரக்கனி, பரத் தவிர சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிரபல புரட்சி பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கை தத்துவங்களும் இணைந்த இந்த புதுமையான திரைப்படம் ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.

அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சமுத்திரகனியையும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமியையும் மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகன் கதாநாயகியாக அறிமுகம் செய்த படம் தான் வசந்தத்தின்டே கனல் வழிகளில் . சமுத்திரக்கனி மீண்டும் பி கிருஷ்ணபிள்ளையாக வீரவணக்கத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பெரும் ஜாதி கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம்.

இத்திரைப்படத்திற்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து அற்புதமான மனதை மயக்கும் பாடல்களை வழங்கியுள்ளது திரைப்படத்தின் தனிச்சிறப்பாகும். ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டிஎம்எஸ் செல்வகுமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணி பாடுகராக வீர வணக்கத்தில் அறிமுகமாகிறார். மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் மனதை உற்சாகப்படுத்தும் புரட்சிப் பாடலை அவர் பாடியுள்ளார்.

வீர வணக்கத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நாட்டு நாட்டு உட்பட 600 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் யாசின் நிசார், கேரளாவின் முன்னணி நாட்டுப்புறப் பாடகர் சி ஜே குட்டப்பன், ரவிசங்கர் மற்றும் சோனியாவும் அருமையான பாடல்களை பாடியுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இத் திரைப்படத்தில் கரம் கோர்த்துள்ளனர் என்பதால் விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்பொழுது எதிர்பார்ப்பு எழத் துவங்கியுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம்
அடுத்த கட்டுரைசிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்