கலைஞர் மணியம் & மணியம் செல்வனின் கலைக் கண்காட்சி

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில், இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல்லாமல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம்.

1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர்களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை ‘ஆசிரியர் கல்கி” அவர்கள் இனம் கண்டு தம்முடைய பத்திரிகையில் ஓவியராக வேலை வாய்ப்பை வழங்கினார்.

1944 ஆம் ஆண்டில் மணியம், ஆசிரியர் கல்கி அவர்களோடு அஜந்தா எல்லோரா குகைக் கருவூலங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அஜந்தா ஓவியங்கள் மணியம் அவர்களின் வண்ணச் சித்திர மடல்கள் 1944 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியிடப்பட்டன. அவருடைய நீடித்த கலைப் பயணத்துக்கு இது முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.

https://youtu.be/ZAP8Iq6vUH4

ஆசிரியர் கல்கி அவர்களின் புகழ்பெற்ற வரலாற்று நாவலான சிவகாமியின் சபதம்” தொடருக்கு இடையிடையே மணியம் வரைந்த சித்திரங்கள் கல்கி வாசகர்களிடம் மிகுந்த பாராட்டைப் பெற்றுத் தந்தன.

1950 ஆம் ஆண்டில் கல்கி அவர்கள் தம்முடைய மகத்தான காவியமான ‘பொன்னியின் செல்வனைக்” கல்கி இதழில் எழுதத் தொடங்கியபோது மணியம் அவர்கள் தமக்கே உரியமுறையில் மிகுந்த திறமை வாய்ந்த ஓவியராகப் பரிணமித்திருந்தார். கல்கியின் முதன்மை ஓவியராகவும் ஆகியிருந்தார்.

https://youtu.be/tYls1InlMaI

கல்கி அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க நாவலான ‘பார்த்திபன் கனவு” திரைப்படமாக உருவாக்கப் பட்டபோது அதன் கலை இயக்குனராகப் பணியாற்றினார். அவருடைய நுட்பமான கலை ஆற்றலைக் காட்சி அமைப்புக்களில் வெளிப்படுத்தித் தம்முடைய கலை ஆர்வத்தைத் தணித்துக் கொண்டார். 1968 ஆம் ஆண்டில் தம்முடைய கலைத்திறனை தன்னுடைய ஒரே மகன் மணியம் செல்வன் (ம.செ) என்கிற லோகநாதனிடம் அப்படியே ஒப்படைத்துவிட்டு காலமானார். தந்தையின் ஆசிகளுடன் ஓவியர் மணியம் செல்வன் தனது ஓவிய பயணத்தை தொடங்கினார்.

எழுத்தாளர் சாவி தினமணி கதிரில் ஆசிரியராக இருந்த போது “ஓவியர் மணியத்தின் செல்வன், ‘மணியம் செல்வன்’ என்று குறிப்பிட்டு பிரகடனம் செய்தார். இளம் ஓவியரான ம.செ கல்லூரியில் படிக்கும் போதே கல்கி, குமுதம், தினமணிகதிர், கலைமகள், அமுதசுரபி, விகடன் போன்ற பத்திரிக்கைகள் வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தனர்.

ம.செ தன்னுடை கலைப் பயணத்தில் 54 வருடங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார். தம்முடைய தந்தையார் விட்டுச் சென்றுள்ள நுட்பமான வளம் மிக்க கலைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று அடுத்து வருகிற தலைமுறைகள் பயன் பெறவேண்டுமென்பதில் பேரார்வம் கொண்டிருக்கிறார் மணியம் செல்வன்!

ஓவியர் திரு.மணியம் அவர்களின் இந்த நூற்றாண்டில் பொதுமக்கள், மணியம் மற்றும் ‘மணியம் செல்வன்’ இவர்கள் இருவரின் ஓவிய படைப்புகளை நேரில் காண இந்த ஓவியக் கண்காட்சியை பேத்திகள்: சுபாஷிணி பாலசுப்பிரமணியன், தாரிணி பாலகிருஷ்ணன் மற்றும் பேரன்: சுப்பிரமணியம் லோகநாதன். இவர்கள் இணைந்து நடத்துகின்றனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைரூட் நம்பர். 17 தமிழ் திரைப்பட விமர்சனம்