விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர்.

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

‘தெய்வ மச்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. முன்னோட்டத்தில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பி வி ஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இதனிடையே விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ எனும் இணையத்தொடர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைரேசர் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை‘விடுதலை’: நன்றி விழா!