‘போர்குடி’ படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியீடு

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘போர்குடி’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.

11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ். எஸ். நந்தகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘போர்குடி’. இதில் ஆர். எஸ். கார்த்திக் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மணிகண்டன் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘வீச்சருவா வீசி வந்தோம்…’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். பாடலாசிரியர் ஆர். தியாகு எழுதியிருக்கும் இந்த பாடலை, பாடகர் வி. எம். மகாலிங்கம் மற்றும் பாடகி லட்சுமி ஜே.கே. ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

பாடலைப் பற்றி நாயகன் கார்த்திக் பேசுகையில், ” ஒரு திரைப்படத்தின் முகவரியாக அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அமைந்திருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும் போது, அவை லிரிக்கல் வீடியோவாக இணையத்தில் வெளியாகும். ஆனால் எங்கள் படக் குழு முதன் முறையாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிடுகிறோம். இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை போற்றிடும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். இதுவரை சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், தலைவர்களையும் போற்றி ஏராளமான திரைப்படப் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை. இதன் காரணமாக ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்ற பாடலை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம்.” என்றார்.

‘போர்குடி’ படத்தில் இடம்பெற்ற ‘வீச்சருவா வீசி வந்தோம்..’ என்ற நேதாஜி பாடல் துள்ளலிசையாக அமைந்திருப்பதால் இணையவாசிகளையும், இசை ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை11:11 தயாரிப்பில் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’
அடுத்த கட்டுரைஎன்றும் தன் ரசிகர்களுக்காக வாழும் தளபதி விஜய்