மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரனின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் – “தி ஆர்டிஸ்ட்”

சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.
ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன்.

இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக அயராது உழைத்து 12 கண்கவர் செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான தலைப்பில் (Theme) வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த “ஆர்டிஸ்ட்” சமர்ப்பணம்” என குறிப்பிடும் எல் ராமசந்திரன், அயராத பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இந்த கருத்துப்படிவத்திற்காக (கான்செப்ட்) உடனே நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி என்பதை நீங்கள் முதல் பார்வையிலேயே உணரலாம்.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இத்தொகுப்பு ஒரு மாறுபட்ட – புதிய பாணியில் இருப்பதை நீங்கள் உணரலாம். சர்வதேச தரத்தில், ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு புகைப்படங்கள் என 24 புகைப்படங்களோடு, அழகுற வடிவமைக்கபட்டுள்ள இந்த நாட்காட்டி, உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் அழகாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கடந்த 2021ம் ஆண்டு கோவிட் ஊரடங்கு சமயத்தில் “HUMAN”, 2022ம் ஆண்டு “கலைஞன்” என்று தெருக்கூத்து கலைஞர்களை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட நாட்காட்டி ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்முறை “தி ஆர்டிஸ்ட்” நாட்காட்டி விற்பனைக்கு வருகிறது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

வண்ணமயமாய் வாஞ்சையுடன் ஜொலிப்பான் இந்த “ஆர்டிஸ்ட்”.
ஆர்டிஸ்ட் காலண்டர் store.lramachandran.com, அமேசான் போன்ற இணையதளங்களிலும் மற்றும் முன்னணி புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைட்ரம்ஸ் சிவமணி ‘Quotation Gang’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்
அடுத்த கட்டுரைFavourite Debut Actor 2022 (Female)