தி நம்பி எஃபெக்ட் ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான ‘ராக்கெட்ரி’ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சவால் மிகுந்த உண்மை சம்பவங்களை இயக்குநர் மாதவன் படமாக்கி இருந்தார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அற்புதமான வேலை மற்றும் ஆர். மாதவனின் அற்புதமான திரைக்கதை ஆகியவை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்கு மற்றுமொரு அங்கீகாரம் சேர்க்கும் வகையில் படம் ஆஸ்கர் விருது 2023 படங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

இந்தப் படம் ஏற்கனவே ஐஎம்டிபியால் ‘2022ல் இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்படம்’ என்ற பெருமையைக் கொண்டுள்ளது. மேலும், ஆர். மாதவன் எழுதி, இயக்கி தயாரித்து மற்றும் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்த ‘ராக்கெட்ரி’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அதன் முதல் காட்சியின் போது அமோக வரவேற்பைப் பெற்றது.

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றிய நிலையில், ரஜித் கபூர், சிம்ரன், சாம் மோகன், மீஷா கோஷல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்து உள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here