இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது

நடிகர் கார்த்தி பேசும்போது,

மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு..
பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. பக்கத்திலேயே இருக்கும் விஷயத்தை நாம் கவனம் செலுத்தவில்லை. அதை மித்ரன் புரிந்து கொண்டு படத்தை இயக்கியது நம் எல்லோருக்கும் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த படம் எல்லா மொழிகளிலும் நன்றாக ஓடியது. அதிலும் அவர் முதல் படம் என்பதே ஆச்சிர்யபட வைத்தது. அவர் மீது ஆர்வம் அதிகமானது. அதன் பிறகு ஹீரோ படத்தை இயக்கினார். பின்பு இந்த படத்திற்கு லக்ஷ்மன் சந்திக்க வைத்தார். அப்போது இந்த படத்தின் ஒரு வரியைக் கூறினார்.

மிலிட்டரியில் 80-ல் ஒரு உளவாளி குழுவை உருவாக்கினார்கள். மிலிட்டரிகாரர்களை உளவாளியாக நடிக்க சொல்லி கொடுத்தார்கள். பிறகு, ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஒரு நடிகரை மிலிட்டரிகாரராக மாற்றிவிட்டால் என்ன என்று யோசித்தார்கள். அதன்படி ஒரு நாடக நடிகரை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து உளவாளியாக மாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தகவல் கூறினார். அதைக் கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த கதையை முழுதாக எழுதிவிட்டு வாருங்கள் என்று கூறினேன். அவர் எழுதி விட்டு இந்தக் கதாபாத்திரம் இரட்டை கதாபாத்திரமாக மாறி இருக்கிறது என்று கூறினார். மறுபடியும் இரட்டை வேடமா? வேண்டாம் என்று கூறினேன். ஆனால் மித்ரன் கதை கேளுங்கள். இந்த கதைக்கு இரட்டை பாத்திரம் தேவைப்படுகிறது என்று கூறினார். கதைக் கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது. அனைத்து நடிகர்களின் வாழ்க்கையிலும் இது மாதிரி ஒரு காதபாத்திரம் நிச்சயம் வரும். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் காலத்திலும் வந்திருக்கிறது. ரஜினி சார், கமல் சார் காலத்திலும் நடந்திருக்கிறது. அண்ணனும் அயன் படத்தில் பல்வேறு வேடங்களில் தோன்றினார். அவருக்கு எல்லாம் பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். மேலும், எத்தனை வேடங்கள் போட்டாலும் எதற்காக போடுகிறோம் என்பதில் தான் அந்த வேடத்திற்கு மரியாதை கிடைக்கும். அதேபோல், நம் இந்திய உளவாளி, நம் மண்ணில் இருக்கும் ஒருவன், அவன் எப்படி சிந்திப்பான், எதற்காக உளவாளி ஆகிறான் என்பது எனக்கு பிடித்திருந்தது.

மேலும், அதை எப்படி ஏமாற்றாமல் உண்மையாக பண்ண முடியும் என்பதற்கு தான் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 40, 50 மற்றும் 60 வயதிற்கு மேல் உடல் ரீதியாக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தது.

இந்த படம் பெரிய விஷயத்தை பேசுகின்றது. அது எப்படி எளிமையாக புரிய வைக்கப் போகின்றோம் என்று நினைக்கும்போது தான் இப்படத்தின் ஹீரோ என்று கூறிய அதிசய குழந்தையாக ரித்விக் வந்தான். ஜூராசிக் பார்க் படத்தை நம்ப வைத்தது எது என்றால் குழந்தைகளின் ரசனை தான். அவர்களின் ரசனையும், அப்பாவித்தனமும் தான் நம்மை யதார்த்தில் நுழைய வைத்தது.

இறுதிக் காட்சியில் நானும் மித்ரனும் இது சரியாக வருமா? என்று பேசிக்கொண்டிருக்கும் போதே விஜி என்று ரித்விக் அழைப்பான். அங்கேயே எல்லாம் உடைந்து விட்டது. அப்போது, நம்முடைய பிரச்சினை அவனுடைய பிரச்சினையாக மாறியதை கவனித்தேன்.

மேலும், உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்ப்பை த்ரில்லராக இருக்கும். நாங்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்.

மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் பிதாமகனில் பார்த்தது போலவே இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது. பிறகு ராஷி கன்னா வந்தார் அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார். ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். என்னமா? 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்கிறாய் என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.

உளவாளி படம் என்று கூறிவிட்டோம். ஆனால், பக்கத்திலேயே அமேசானும், நெட்ஃபிளிக்ஸ்-ம் இருக்கிறார்கள். பொன்னியில் செல்வன்-1 –ஐ சிவாஜி புத்தகம் படிப்பது போல் வீடியோ வெளியிட்டார்கள். அதுபோல, இப்படத்தை எப்படி காட்டப் போகிறார்கள் என்று ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஃபிரேம் வைக்கும் போதும் பயத்துடன் தான் பணியாற்றினோம்.

மேலும், ஒரு தளம் போடுவார்கள், பிரமாண்டமாக இருக்கும். இங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு இருக்குமா? என்று கேட்டால், இல்லையில்லை இரண்டு நாட்கள் தான் என்பார்கள். இதைப் பார்க்கும்போது தீரன் படம் தான் நினைவிற்கு வந்தது. அந்த படத்தில் என்னை ஓட வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோல, இந்த படத்திலும் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு தளம் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பு நிறுவனத்தில் செய்து கொடுத்தார்கள். அதிலேயே இப்படத்தின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.

இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம். வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன் முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டு தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன் என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான், அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதினார். எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று மித்ரனிடம் கூறினேன். ஏனென்றால், இன்று நம் ஒவ்வொருவருக்குமே அவரவர் செய்யும் வேலைகளில் அங்கீகாரம் தேவைப்படுகிறது. நாம் ஒரு சிறிய செயல் செய்தாலும் சமூக வலைதளங்களில் லைக், கமெண்ட் வேண்டும் என்பதிற்காக பதிவிடுகிறோம். அப்படி இருக்கும்போது, உளவாளி என்பவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் அவர்கள் செய்யும் செயல்கள் வெளியே தெரியாமல் சேவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியும் மக்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்படிப்பட்ட தியாகம் செய்யக் கூடிய கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. சர்தாராக ஒவ்வொரு வசனம் பேசும்போதும் உறுதியாக உணர்ந்தேன். அதற்கு எதிராக விஜி என்கிற பாத்திரம். நான்கு பேருக்கு நல்லது செய்தால் கூட, அதை 40 ஆயிரம் பேருக்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்று நினைப்பவன். இரட்டை வேடத்தில் நடிக்கும்போது முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், ஒரு கதாபாத்திரம் போலீஸ், இதில் தீரனோ, சிறுத்தை கதாபாத்திரத்தின் சாயலோ வரக்கூடாது என்று நினைத்தேன். அது அழகாக அமைந்தது. அதிலும், ரித்விக் உடன் இருக்கும் காட்சிகளில் நான் உற்சாகமாக இருந்தேன். பார்த்த உடனேயே நீங்கள் போலீஸா? நான் நம்ப மாட்டேன் என்று கூறிவிட்டான். அவனை சமாதானப்படுத்துவதே பெரும் பாடாக இருந்தது.

ஒரு குழுவாக இணைந்து ஆய்வுக் கூடத்தில் பணியாற்றுவது போல் தான் நான், ஜார்ஜ், திலீப் மற்றும் மித்ரன் பணியாற்றினோம். இறுதியாக ரூபனிடம் கொடுத்தோம். மித்ரன் இப்படத்திற்கு 3 வருடமாக செய்த ஆராய்ச்சியை கூறினால் அது ஆவணப் படமாகி விடும். தீபாவளி அன்று வெளியாவதால், எந்த விஷயம் இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்பதை பிரித்து எடுத்து 3இ என்று சொல்லக்கூடிய பொழுதுபோக்கு, ஈடுபாடு மற்றும் எட்ஜுகேட் கொடுத்தது மிக முக்கியமான வேலையாகப் பார்க்கிறேன். தீபாவளி அன்று வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், தீபாவளி அன்று வெளியாகும் படங்களை நினைவில் வைத்திருப்பார்கள். இனிமேல் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அப்படி ஒரு படமாக சர்தார் இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

மேலும், இப்படத்தை ரெட் ஜெயிண்ட் வழங்குகிறார்கள் என்பது மிகப் பெரிய தைரியம் கொடுக்கிறது. படத்தை யார் எடுத்துக் கொண்டு சென்றாலும் உதவும் மனப்பான்மையுடன் விநியோகிக்கிறார்கள். அனைத்து படங்களுமே எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகிறது. இதற்காக ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும், உதய்க்கும், ராஜா மற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த வெற்றிக்கு நீ தகுதியாக இருக்கிறாயா? என்று யோசித்துப் பார் என்று அண்ணன் கூறுவார். அந்த தகுதிக்கு ஏற்ப நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். தீபாவளிக்கு சர்தார் மற்றும் சிவாவின் பிரின்ஸ்-ம் வருகிறது. இரண்டு படங்களும் வெவ்வேறு கேளிக்கையுடன் வருகிறது. அனைவருக்கும் சிறப்பு தீபாவளியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

வந்தியதேவனுக்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதன்பிறகு வேறொரு படம் கொடுக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும். சும்மா நின்றுக் கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரி தான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன். என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன். ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு பகலாக பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல்நலம் சரியில்லாமல் போனார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என்றார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here