17-02-1985 ல் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பிறந்த சிவகார்த்திகேயன்.கல்லூரி காலத்தில், பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்று மேடையில் மிமிக்ரி மற்றும் ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சிகளை செய்து தனது திறமையை வெளியே கொண்டுவந்தார்.
சிவகார்த்திகேயனின் நண்பர்கள் சிலர் அவரை ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் ஆடிஷன்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தினர், சிவாவும் சென்றார் ஆடிஷனில் தேர்வானார். 2006 ல் அவர் ஒரு மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பங்கேற்ற ஆரம்பத்தில் தயக்கம் இருந்தபோதிலும், அவர் நிகழ்ச்சியில் தனது முழு திறைமையையும் வெளிப்படுத்தினார், பின்னர் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.
சிவகார்த்திகேயன், தனது நண்பர் அட்லீயின் முகப்புத்தகம் , மற்றும் 360° உள்ளிட்ட குறும்படங்களில் நடித்தார் . ஏகன் படத்தின் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை கவனித்து, படத்தில் அவருக்கு ஒரு துணை வேடத்தை வழங்கினர், ஆனால் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாமலும், கவனிக்கப்படாமலும் போய்விட்டது. பிறகு 2008 ம் வருடம் விஜய் டீவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் (சீசன் 3) ல் பங்கேற்றார்.
2012 ல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், அதே வருடம் வெளியான 3 படத்தில் தனுஷின் நண்பனாகவும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்ததாக மனம் கொத்தி பறவை, கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்துவந்தார் சிவகார்திகேயன். அதுமட்டுமல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு பாடலை பாடி பாடகராகவும் தன் திறமையை உலகிற்கு காட்டினார்.
சிவகார்த்திகேயன் தொடர்ந்து நடித்த மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் மி க பெரிய வெற்றி அடைந்தான. 2018 ல் தான் நடித்திருந்த கனா திரைப்படத்தை தானே தயாரித்து, தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் , அதிலும் வென்று காட்டினார் சிவகார்த்திகேயன். மற்றும் அதே வருடம் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதி, பாடலாசிரியராகவும் தன் திறமையை காட்டினார். தொடர்ந்து இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகவே அமைந்தது.
2021-ல் வெளியான, டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தவுடன், இவருக்கு இது முதல் 100 கோடி வசூலை குவித்த படமாகவும் அமைந்தது. அதனை தொடர்ந்து வெளியன டான் திரைப்படமும் 100 கோடி வசூலை குவித்தது.
2024- ல் வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது, இந்த அமரன் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு என்பது நாம் அறிந்ததே, ஆனால் அந்த படத்திற்காக சிவகார்த்திகேயனின் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிக பெரியது, அதற்காக இவருக்கு கிடைத்த பரிசுதான் 300 கோடிக்கு மேல் வசூல், மக்களிடையே பாராட்டு, இவையெல்லாம் தாண்டி 100- வது நாள் வெற்றிகொண்டாடமும் சமீபத்தில் நடைபெற்றது.
அமரன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் திரையரங்கிற்கு வர தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் SKxARM இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குனர் AR. முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைக்க, ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கு மதராஸி என பெயரிட்டு படத்திலிருந்து டைட்டில் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக சுதா கொங்கோரா இயக்கத்தில், பராசக்தி திரைப்படம் விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது.
முதல் படமாக மெரினாவில் கால் பாதித்த சிவா, 25 வது படத்தில் பராசத்தியாக உருவெடுத்துள்ளார்.
இவரின் திரைப்பயணம் மேலும் மேலும் சிறக்கவும், திரைத்துறையில் மிகப்பெரிய இடத்தை அடையவும் தமிழ் படம் சேனல் சார்பாக வாழ்த்துகிறோம்.
17-02-2025 இன்று பிறந்தநாள் நாள் காணும் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் கொண்ட சிவகார்திகேயக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.