‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம் – நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை- என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இசையமைப்பாளர் ஜீ.‌ வி பிரகாஷ் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன்.‌ பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் பாருங்கள். கேளுங்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா- இயக்குநர் பா. ரஞ்சித் -நடிகர் விக்ரம் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் கொடுத்த இந்த வாய்ப்பினை நான் சிறப்பாக பயன்படுத்தி முயற்சி செய்திருக்கிறேன். விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து, ‘தங்கலான்’ படத்தில் இணைந்திருக்கிறேன்.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு இது. இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானவேல் ராஜா- அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ” என்றார்.

நடிகர் பசுபதி பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு பல சிறப்பு காரணங்கள் இருக்கிறது. முதலாவது காரணம் பா. ரஞ்சித். இந்த கதைக்களம் புதிது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத களம் இது. புது அணுகுமுறை. ரஞ்சித்தின் படங்களில் ஒரு புது தேடல் இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்தது.‌ அவருடைய தேடல் எங்களுக்கானதாகவும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்கும் சிறப்பானது.‌” என்றார்.‌

நடிகர் டேனியல் கால்டாகிரோன் பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் ‘நன்றி- வணக்கம் -சென்னை’ ஆகிய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன். விக்ரம் எனக்கு சகோதரரை போன்றவர்.‌ அவர் இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர். என்னுடைய வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கம். என்னுடைய சென்னை சகோதரர் விக்ரம். இங்கு வருகை தந்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஓராண்டு பழகி இருக்கிறேன். இந்த அனுபவம் மறக்க முடியாதது. இயக்குநர் பா. ரஞ்சித்தும் என்னை கவர்ந்தவர். அவருடைய கற்பனையை நாங்கள் நனவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம். ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா இந்திய சினிமாவில் சிறந்த நடிகை. அற்புதமாக நடிக்க கூடிய திறன் படைத்தவர். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை பார்வதி பேசுகையில், ” நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை.

ஜீ. வி. பிரகாஷ் இந்த படத்திற்காக வழங்கிய இசை – ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது. இதற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றி படங்களை வழங்கிய நிறுவனம். இவர்களுடன் இந்த படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு இந்த படத்தில் நனவானது. அவருடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே வாய்ப்பு கிடைத்தும் என்னால் பல்வேறு காரணங்களால் ஏற்க இயலாதிருந்தது. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் கங்கம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.‌ ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நிறைய நெருக்கடி கொடுத்தேன். கேள்விகளை கேட்டு தொல்லை கொடுத்தேன். ஆனால் அவர் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார்.‌

அவர் உருவாக்கிய கங்கம்மா என்ற கதாபாத்திரம் மட்டுமல்ல அவர் உருவாக்கிய உலகம், அரசியல் இதற்கெல்லாம் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ அவருடைய இயக்கத்தில் கங்கம்மாவாக வாழ ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.‌ உடன் நடிக்கும் சக கலைஞர் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். இதனைத் தான் நான் ஒரு கலைஞருக்கான குறைந்தபட்ச தகுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் உடன் நடிக்கும் சக கலைஞர்கள்- நடிகைகள்- நடிகர்கள் – மீது பேரன்பு கொண்டவர் சீயான் விக்ரம். நான் கங்கம்மாவாக வாழ வேண்டும் என்றால் அவர் தங்கலானாக வாழ்ந்தால் தான் முடியும். இதற்காக விக்ரமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஏற்று நடித்த தங்கலான் கதாபாத்திரத்தை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை. அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

படப்பிடிப்பு தளத்தில் மாளவிகா, பசுபதி போன்றவர்கள் நடிக்கும் போது நான் தூரத்தில் இருந்து தான் பார்த்து ரசித்திருக்கிறேன்.‌ படத்தில் என்னுடைய வாரிசுகளாக நடித்த நடிகர்களுடன் ஒரு குழுவாகத் தான் இருப்போம்.‌

படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். வெற்றியைப் பெறலாம். நம் வாழ்க்கை எப்போதும் அரசியலுடன் தான் இருக்கிறது. நாம் எதை செய்தாலும் அது அரசியல். அந்த வகையில் ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாவது தற்செயலானது அல்ல. சுதந்திரம், விடுதலை பற்றி நிறைய பேசுகிறோம். இதனை தொடர்ந்து பேச வேண்டும்.‌ பாகுபாடு என்பது இன்றும் ஏன் இருக்கிறது என்று குறித்தும் பேச வேண்டும். இதைப்பற்றி நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் இதில் எவ்வளவு அசௌகரியம் இருந்தாலும்.. ஏனெனில் சினிமா என்பது அரசியல். கலை என்பதும் அரசியல். .இதற்காக ரஞ்சித் ஒரு ஆர்மியையே வைத்திருக்கிறார். அவருடைய படை வீரர்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என்றார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், ” இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.‌ தங்கலான் என் இதயத்தின் ஒரு பகுதி. என்னுடைய கலை உலக பயணத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை.‌ இந்த ஒன்றரை ஆண்டு கால பயணம் மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது மனிதநேயமிக்க கலைஞர்களை சந்தித்தேன்.

ஆரத்தி என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வேடத்தை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் இந்திய சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரத்தை யாரும் ஏற்று நடிக்க வில்லை என நினைக்கிறேன்.

விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.‌ சக நடிகையை சௌகரியமாக …அக்கறையுடன் .. அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை.‌

தங்கலான்- ஒரு கூட்டு முயற்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பேசுகையில், ” ஒரே தருணத்தில் ‘தங்கலான்’, ‘கங்குவா’, ‘வா வாத்தியார்’ போன்ற படங்களை தயாரிப்பதற்கு காரணம் எனகாகு பக்க பலமாக மனைவி நேகா இருப்பது தான். இவரைத் தொடர்ந்து தனஞ்செயன், ராஜா, தினேஷ் ,சக்தி வேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம்.‌ இதனை கடந்து வருவதற்கு மிக கடினமாக இருந்தது. இந்த தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வந்த் பண்டாரி. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவருடன் அபினேஷ் இளங்கோவன், தங்கராஜ், ஜீ. வி. பிரகாஷ், ஏ. எல். விஜய் ஆகியோரும் உதவினர்.

ஜீ. வி. பிரகாசுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரிடம் ஒரு பணியை கொடுத்து விட்டால்.. தன் சொந்த பணியாக நினைத்து, தயாரிப்பாளரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவது அவருடைய ஸ்டைல். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார். படத்திற்கு அற்புதமான பாடல்கள் வழங்கி இருக்கிறார்.‌ படத்தின் பின்னணி இசையை நான் இதுவரை கேட்கவில்லை. அத்துடன் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்திருக்கிறது.‌ இதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் தான் காரணம்.

இந்த படத்தில் பார்வதி- மாளவிகா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள் இருவரும் இரு வேறு எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை நான் பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இந்தப் படத்துடன் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆகஸ்ட் 15 எங்களுக்கு மறக்க முடியாத நாள். ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு முன் ‘அட்டக்கத்தி’ எனும் திரைப்படம் இந்த நாளில் தான் வெளியானது.

பா. ரஞ்சித் தற்போது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் ஏராளமானவர்களுக்கு அடையாளத்தை உருவாக்கித் தருகிறார். இசைக் கலைஞர்களுக்கும் அவர் தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அவருடைய சமுதாய சிந்தனையும், சினிமா மீது இருக்கும் அவருடைய காதலும்.. இன்னும் மிக வீரியமான படைப்பினை அவர் வழங்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

விக்ரம் – அவருடைய பயணமானது மிகவும் கடினமானது. ஆனால் எந்த இடத்திலும் அவர் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டதில்லை. சினிமா- ஒரு கடினமான விடயம் என்று எப்போதும் வெளிப்படுத்துவதில்லை. இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த வேலையை செய்வதற்கு வேற ஆள் கிடையாது’ என்று. அது விக்ரமுக்கு பொருத்தமானது.‌ உண்மையை சொல்லப்போனால் இந்த படத்தில் விக்ரம் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை. இந்த படத்தில் அவருடைய கடின உழைப்பிற்கு அவர் இன்னும் கூடுதலான உயரத்தை தொடுவார். இதைவிட சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.‌ அவருடைய நடிப்பில் உலக சினிமாவை ஒரு ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார் என நம்புகிறேன்.‌ ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும். ” என்றார்.

இவ்விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ” மகிழ்ச்சியான தருணம் இது. ‘அட்டகத்தி’ படத்தில் ஞானவேல் ராஜாவுடன் தொடங்கிய இந்தப் பயணம். எனக்கு ஆதரவு கொடுத்து இந்த படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பளித்து, என் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஞானவேல் ராஜா.‌ அவரை மறக்க கூடாது என்பதற்காக உருவாக்கியது தான் ‘தங்கலான்’ என நான் நினைக்கிறேன்.

சர்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.‌ அந்தத் தருணத்தில் ஞானவேல் ராஜாவுடன் தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன். அப்போது என்னிடத்தில் ‘அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் அவருடன் இணைந்து இருக்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அந்தத் தருணத்தில் என் மனதில் இவருடன் இணைய வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான்.

அவருடன் இணைந்து நின்றதற்காக அவர் செய்த விசயம் சாதாரணமானதல்ல. தங்கலான் என்ற ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்ற போது அதன் பட்ஜெட் மீது பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் நிறைவடையும் வரை எந்த ஒரு சிறிய தடையை கூட வரவிடாமல் படத்தை நிறைவு செய்தார். நான் நினைத்த ஒரு படத்தை.. எந்தவித சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு பெரிய ஆதரவை அவர் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நன்றியை ஒரு வெற்றியாக வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஒரு தயாரிப்பாளராக அவர் என் மீது வைத்த நம்பிக்கையை.. ஒரு சகோதரராக அவரின் மீது வைத்த நம்பிக்கையை.. ஒரு வெற்றியை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த திரைப்படம் நீங்கள் நினைப்பது போல் பிரம்மாண்டமான வெற்றியை வழங்கும் என நம்புகிறேன். அத்தகைய வெற்றியை இந்த படைப்பு கொடுக்கும் .

சினிமா நம் வாழ்க்கை மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த சினிமாவை எப்படி பயன்படுத்த வேண்டும்? அந்த சினிமா தற்போது எப்படி இருக்கிறது?..

நான் கலைக் கல்லூரியில் படிக்கும் போது சினிமாவை சரியாக புரிந்து கொண்டு தான் சினிமாவில் நுழைந்தேன். நான் கலை கல்லூரி சேர்ந்த பிறகு தான் முதன் முதலாக திரைப்பட விழாவினை நடத்தினார்கள். அதன் பிறகு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல உலக சினிமாக்களை பார்த்தேன். நான் பார்த்த பல உலக சினிமாக்கள் தான் என்னை உருவாக்கியது. அதனால்தான் இப்போது நான் இங்கு வந்து நின்றிருக்கிறேன். ‘சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்’, ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ , ‘சினிமா பாரடைஸ்’ இது போன்ற படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இது என்னைக் கவர்ந்தது. நான் ஓவியக் கலைஞராக இருந்தாலும் ஏன் திரைத்துறைக்கு செல்லக்கூடாது என நினைத்துதான் இதில் நுழைந்தேன்.

நாம் சினிமாவை இயக்கினால் நம்முடைய பிரச்சினைகளை சொல்லலாம் என நினைத்தேன். சொல்லப்படாத கதைகளை சினிமாவில் சொல்லலாம் என நினைத்தேன். இன்றும் சினிமா ஒரு ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகமாக இருக்கிறது. இந்த ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகத்தின் மூலமாக சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட வரலாறை மக்களிடம் எளிதாக கடத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.‌ இதனால்தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.

சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. வரலாற்றில் குறிப்பிடப்படாத நிறைய பகுதிகள் இருக்கிறது. வரலாற்றை படிக்கும் போது நான் யார்? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி என்னுள் எழுகிறது. வரலாற்றில் நான் ஏன் இப்படி இருந்தேன்? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. என்னுடைய மக்களுக்கும் இப்படி ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஏன்? இவ்வளவு பாகுபாடு இருக்கிறது. ஏன் பிரிவினை இன்றும் இருக்கிறது.. என பல கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால்… வரலாறு ஒரு பக்க சார்புடையதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை. அவர்களுடைய மொழி இல்லை.‌ அவர்களைப் பற்றிய குறிப்புகள் கூட இல்லை. தேடித்தேடி பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

இதுபோல்தான் சினிமாவிலும்… எது மாதிரியான படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து எந்த படங்களும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான தேடலுடன் தான் நான் சினிமாவில் வந்தேன்.‌ குறிப்பாக பாபா சாகிப் அம்பேத்கரின் தீண்டப்படாதவர்கள் யார்? என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த புத்தகத்தை வாசிக்கும் போது தான் மறைக்கப்பட்ட வரலாறை உருவாக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது.

கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட எழுத்துகள் தான் வரலாறா? மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீட்பது..? ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய உணர்வை கற்பனையான உத்தி மூலம் மீள் உருவாக்கம் செய்வது தான் இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எனவே அந்த வரலாற்றின் தேவையை உணர்ந்து அதனை திரைப்படங்களின் மூலமாக நான் தேடுகிறேன். ஒரு மாணவனாக… ஒரு வரலாற்று ஆய்வாளனாக… நான் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன். இந்த சினிமா வரலாற்றை தேடுவதுடன் மட்டுமே நிறைவடைந்து விடுகிறதா..! அது இல்லை. சினிமா என்பது இங்கு ஒரு வலிமையான ஊடகமாக இருக்கிறது. மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. மக்கள் அதனுடன் மிகவும் உணர்வுபூர்வமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வரலாற்று ஆய்வுகளோ அல்லது நம்பிக்கைகளோ மட்டும் சினிமா அல்ல. அது வெற்றிகாரமானதாக மாற்றம் அடையுமா ? என எனக்கு கணிக்க தெரியவில்லை.‌

சினிமாவிற்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்து தான் சினிமாவிற்குள் வந்தேன்.‌ ஆனால் சினிமா வித்தியாசமாக இருந்தது. அதிலும் தமிழ் சினிமா மிக வேறுபாடாக இருந்தது. தமிழ் சினிமாவில் நான் நினைக்கும் கருத்துக்களை சொல்ல முடியுமா..? என்ற பயமும் எழுந்தது. இந்த பயத்தை நீக்கியது எங்கள் இயக்குநர் வெங்கட் பிரபு தான்.

இவ்விழாவில் சீயான் விக்ரம் பேசுகையில், ” இந்த படத்தின் பிள்ளையார் சுழி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். இது போன்றதொரு படைப்பை உருவாக்குவதற்கு தனித்துவமான துணிச்சல் தேவை. அதனை செய்து சாதித்ததற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் ஒரு ‘ஓ’ போட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம்.

படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்து அற்புதமாக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாருக்கும் நன்றி. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமானது. இந்த படத்தை நீங்கள் பார்ப்பதை விட ஜீவி இசை மூலம் கேட்பீர்கள். இன்றைய விழாவின் நாயகன் அவர்தான். படத்தில் நாங்கள் உணர்ந்து நடித்த விசயத்தை .. நீங்கள் திரையில் அற்புதமான இசை மூலம் மேம்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கிய ஒலிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தது. இதற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவிற்காக ஆர்வத்துடன் காத்திருந்து வருகை தந்த என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய என்னுடைய குழுவினருக்கு இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் மேக்கப் போட வேண்டும். அதிலும் குறிப்பாக முப்பையிலிருந்து வருகை தந்த டாம் எனும் கலைஞர்.

இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் ரஞ்சித் கற்பனை செய்து உருவாக்கியிருந்தாலும், இதனை திரையில்‌ காணும் தோற்றத்தை உருவாக்கியவர் ஒப்பனை கலைஞர் டாம் தான்.

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் தோன்றும் தொப்பையை நிஜமாகவே சாப்பிட்டு சாப்பிட்டு ஏற்படுத்திக் கொண்டதுதான்.

என்னுடைய குழுவை சேர்ந்த ஷ்ரவண் டாட்டூவை வரைவார். மேலும் என்னுடைய குழுவை சேர்ந்த கலை , பிரின்ஸ் இவர்களெல்லாம் என்னுடைய ஒப்பனையை சீராக்கியவர்கள். செதுக்கியவர்கள்.

‘தூள்’ படத்தில் தொடங்கி இதுவரை ஆறு படங்களில் பசுபதி உடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவரை நான் யாருடனும் இவ்வளவு படங்களில் நடித்ததில்லை.‌ இந்தத் திரைப்படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் பேசும் ஸ்லாங்கை அனைவரும் மேடையில் மிமிக்கிரி செய்வார்கள். அந்த அளவிற்கு அவருடைய பேச்சு பிரபலமாகும். அவர் இப்போது துருவ்‌ உடனும் பைசன் படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன் – ஆரத்தி எனும் கதாபாத்திரத்தை மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். படத்தில் அவர்கள் பேசும் டயலாக் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் ரஞ்சித் அவரிடம் இருந்து நேர்த்தியாக வேலையை வாங்கினார்.

பார்வதி- இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பி இருக்கிறேன்.‌ அவருடைய ஸ்டைல் ஆப் ஆக்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

பா ரஞ்சித் சொன்னது போல் அந்த காலகட்டத்தில் பெண்களும் வேலைக்குச் செல்வார்கள். போருக்கு செல்வார்கள். சண்டையிடுவார்கள். அவர்களுடைய கைகளும் ஆண்களின் கைகளே போல் கடினமாகத்தான் இருக்கும். அது போன்றதொரு சமத்துவம் இருந்த காலகட்டம் அது.‌ ரஞ்சித்தின் படங்களில் பெண்கள் எப்போதும் உறுதியானவர்களாக இருப்பார்கள். இந்தப் படத்தில் நாயகனுக்கு நிகராக நாயகிகள் இருக்கிறார்கள் . இதனால் பார்வதி , மாளவிகாவுடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.

டேனி – படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். படத்தில் அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரிடம் படத்தின் விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்களோ கலந்து கொள்ள மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். அங்கு நாங்கள் இந்த படைப்பை எப்படி கொண்டாடுகிறோம் என்பதனை நேரில் காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதற்காக இன்று இந்த இசை வெளியீட்டு விழாவில் அவரும் கலந்து கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் அரிகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை நான் ‘மெட்ராஸ்’ படத்திலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவன் சிறந்த நடிகர். அனைத்து இயக்குநர்களும் அவன் மீது ஒரு கண் வைத்து, வாய்ப்பினை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சியை படமாக்கும் தருணத்தில் அவனது முயற்சிகள் அனைத்தும் ‘சேது’ படத்திற்கு முன் நான் எதனை முயற்சி செய்தேனோ..‌ அதனை அவரிடத்தில் பார்த்தேன். அதனால் உறுதியாக சொல்கிறேன் எதிர்காலத்தில் அரிகிருஷ்ணன் சிறந்த நடிகராக வலம் வருவார்.

படத்தில் நான் மட்டுமல்ல ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். பா ரஞ்சித் ஒவ்வொரு காட்சியை ஓவியம் போல் செதுக்கியிருக்கிறார். ஒரு காட்சியில் நான் மட்டும் கோவணம் கட்டிக்கொண்டு தோன்றுகிறேன் என நினைத்தேன். அந்தக் காட்சி இரண்டு நாள் நீடிக்கும் என நினைத்தேன். ஆனால் பத்து நிமிடத்தில் அந்த காட்சியை இயக்குநர் ரஞ்சித் படமாக்கினார். அந்தக் காட்சியில் உடன் நடித்த அனைவரும் அர்ப்பணிப்புடன் முழு ஈடுபாட்டுடன் நடித்து அந்த காட்சியை நிறைவு செய்தனர். இது எனக்கு பிரமிப்பை தந்தது.

சில காட்சிகளில் நான் நிற்பது கூட தெரியாமல் என்னை தள்ளிவிட்டு நடிகர்கள் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கினார்கள் . இதற்காக இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.

‘சேது’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘ஐ ‘ ‘ராவணன்’ ஆகிய படங்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு நடித்தேன் என அனைவருக்கும் தெரியும். அனைத்து கதாபாத்திரங்களையும் நான் கஷ்டப்பட்டு, முழு ஈடுபாட்டுடன் தான் தான் நடித்திருக்கிறேன். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படங்கள் எல்லாம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. ஆனால் தங்கலானுடன் ஒப்பிடும்போது இவை மிகக் குறைவு.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமெய்யழகன் அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம்
அடுத்த கட்டுரைராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படம் “டாக்சிக் படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் வரும் 8 ஆகஸ்ட் முதல் துவங்குகிறது.