சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!

அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘யாவரும் வல்லவரே’. சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஹைப்பர் லிங்க் கதைக்களம் கொண்டது. இளைஞர்கள், குடும்பம் என்று இந்தக் கதைக்கான பார்வையாளர்களைப் பிரிக்க முடியாது. ஆறில் இருந்து அறுபது வரை எல்லோருக்குமான படமாக இது உருவாகி இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் இவ்வளவு வன்மம், வெறுப்புகள் வளர காரணம் எல்லோர் உள்ளும் தேங்கி இருக்கும் அன்புதான். அந்த அன்பை தொலைத்துவிட்டுதான் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கும் முயற்சிதான் இந்தப் படம்.

குடும்பங்களுக்கு நகைச்சுவை, இளைஞர்களுக்கு காதல், வயதானவர்கள் ஏங்கக்கூடிய அன்பு என எல்லோருமே விரும்பி ஏற்கக் கூடிய கதையாக இது இருக்கும் என நம்புகிறேன். இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருக்கத்தக்க காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது” என்றார்.

சமுத்திரக்கனி, யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மயில்சாமி, போஸ் வெங்கட், ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், சேரன் ராஜ், சைத்தான் அருந்ததி, ‘மெட்ராஸ்’ ரித்விகா, தேவதர்ஷினி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் மார்ச்15 அன்று வெளியாகிறது. இவர்களோடு ஒரு மிகப்பெரிய நடிகரோட போட்டோ இந்த படம் முழுக்க டிராவல் ஆகும் என்ற சஸ்பென்சோடு முடித்தார் இயக்குநர் ராஜேந்திர சக்ரவர்த்தி.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபோர் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைபா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமைப்படுகிறேன் – இயக்குனர் வெங்கட் பிரபு