“பேப்பர் ராக்கெட்” வெற்றியைப் பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்*

சமீப காலத்தில், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் வெப் தொடர், கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள “பேப்பர் ராக்கெட்”. இந்த ஹிட் தொடருக்கு, தனது இசையால் மெருகூட்டியுள்ள இசையமைப்பாளர் சைமன் கே.கிங், தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பல்வேறு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளார்.

தான் இசையமைத்த “சத்யா” திரைப்படத்தின் “யவ்வனா” என்ற சூப்பர்ஹிட் பாடல் வெளியான உடனேயே தன்னை அணுகிய முதல் இயக்குனர் கிருத்திகா உதயநிதி தான் என்றும், அடுத்த படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியது தான், இந்த அருமையான பயணத்தின் ஆரம்பம் என்றும் கூறுகிறார், சைமன்.

“பேப்பர் ராக்கெட் வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மட்டுமல்லாமல் பரவலான பார்வையாளர்களையும் சென்றடைந்துள்ளது. ரம்யா நம்பீசன் பாடிய “சேரநாடு” என்ற தமிழ்-மலையாளம் இருமொழிப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சமீப காலங்களில் வெளியாகும் திரைப்படங்களின் கதைகளில் முன்பு போல் பாடல்களுக்கு முக்கிய பங்கு இல்லை என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால், இயக்குனர் கிருத்திகா எப்போதுமே தனது கதைகளில் பாடல்களுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனாலேயே பேப்பர் ராக்கெட்டில் அற்புதமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன” என்று சைமன் கே.கிங் கூறுகிறார்.

“மிகவும் திறமையான இசையமைப்பாளர்களான தரன் மற்றும் வேத் ஷங்கர் ஆகியோருடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த அனுபவம். இந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் கிருத்திகாவுக்கு நன்றி” என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சைமன் கே.கிங்.

அடுத்ததாக, வெற்றிகரமான இயக்குனர் இணையான புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில், அமேசான் ஒரிஜினலுக்காக “வதந்தி” என்ற மர்ம திரில்லரை நமக்கு வழங்குவதற்காக, சைமன் கே.கிங். மீண்டும் “கொலைகாரன்” படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார். S.J.சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“கொலைகாரன்” & “கபடதாரி” போன்ற புயலான த்ரில்லர் படங்களுக்குப் பிறகு, “பேப்பர் ராக்கெட்” ஒரு தென்றலாக வீசுவது ஒரு இனிமையான அனுபவம் என்று சிரிக்கிறார், இசையமைப்பாளர் சைமன் கே.கிங்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here