ஃபர்ஹானா திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர் அறிக்கை

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது. மேலும் இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே எனக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தையும், “ஃபர்ஹானா” திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை. இஸ்லாமியர்களை பற்றி இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் அறிந்து வைத்திருக்கும் விதத்திலேயே ஃபர்ஹானா திரைப்படத்தை எடுத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும், இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள் நோக்கோடு இத்திரைப்படத்தில் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இத் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை.

எனவே இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லாத் திரைப்படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்பின்மை கொண்ட சமூகமாக சித்தரிக்க வேண்டாம் என்று இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மதவேற்றுமையை கடந்து ஒரு அமைதிப் பூங்காவாகவே எப்போதும் திகழ்கிறது. இனியும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
 அமீர்

சென்னை
14th MAY 2023

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த அன்னையர் யார் என்பதை கூறுங்கள்…
அடுத்த கட்டுரைடபுள் இஸ்மார்ட்” , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில்  திரையரங்குகளில் வெளியாகிறது !!