ஈழத்தமிழ் தான் தூய்மையான தமிழ் – ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத்தமிழரான கவிஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகத்திறன் கொண்ட சாந்தரூபி அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர் ஆவார். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்ட இவருடைய வரிகள் மற்றும் இசையில் உருவாகியுள்ளது ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ என்ற இசை ஆல்பம்.

50 பாடல்களை கொண்ட இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர்கள் பேரரசு, ராசி அழகப்பன், செந்தில்நாதன், இசையமைப்பாளர்கள் செளந்தர்யன், ஏ.ஆர்.ரெஹானா, பாடகர் மூக்குத்தி முருகன், கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனர் காந்தி கண்ணதாசன், பேச்சாளர் ஜான் தன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அம்பாளடியாள், “இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் சான்றோர்கள் அத்தனை பேருக்குக் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுவிட்சர்லாந்தில் நான் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், எங்களை வாழ வைப்பது தமிழ் தான். அந்த உணர்வுகளை எப்போதும் கடந்து செல்ல முடியாது, அந்த உணர்வுகள் உள்ளவரை தான் எங்கள் வாழ்க்கை என்று எண்ணுகிறோம். அந்த உணர்வுகளை தான் பாடல்களாக இங்கு நான் கொண்டு வந்திருக்கிறேன், என் வாழ்நாளில் இதுபோல் இன்னும் பல பாடல்களை கொண்டு வருவேன். அதே சமயம், சமூகத்தில் எந்த வகையிலாவது நன்மை தரக்கூடிய பாடல்களை மட்டுமே உருவாக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். என் தந்தை, என் மாமன், என் உறவினர்கள் மற்றும் தமிழ் சமூகங்கள் என அத்தனை பேருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்,” என்றவர் ஒரு பாடலை பாடி விருந்தினர்களை வரவேற்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இயகுநர் கே.பாக்யராஜ் சார் இயக்குநராக மட்டும் அல்ல இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர், அவர் இந்த விழாவுக்கு வந்து வாழ்த்துவது மிக சரியான ஒன்று. சாந்தரூபி அம்பாளடியாள் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த போதே பாட்டு படி தான் அழைத்தார. அவருடைய தமிழும், பாடலும் மிக இனிமையாக இருந்தது. தமிழர்களின் பண்பாடே வீட்டுக்கு வரும் விருந்தினர்களை பல நாட்கள் தங்களுடன் தங்க வைப்பது தான். ஆனால், அம்பாளடியாள் அவர்கள் இங்கிருந்து உடனடியாக சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், காரணம் இங்கிருந்தால் உங்கள் தமிழ் மாறிவிடும், பிறகு எங்களால் இந்த இனிமயான தமிழை கேட்க முடியாது. அதனால் இங்கிருந்து உடனே சென்றுவிடுங்கள். உங்களுடைய பாடல்களில் தமிழ் விளையாடுகிறது. இதுபோன்ற தமிழ் பாடல்களை கேட்பது அபூர்வமாகி விட்டது. நற்தமிழ், கொடுந்தமிழ் என்று தமிழ் இரண்டு வகைகள், ஆனால், இப்போது கொடுமையான தமிழ் தான் இருக்கிறது. அம்பாளடியாள் போன்றவர்களால் தான் தூய தமிழ் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் என்றாலே இசை தான், இசை என்றாலே தமிழ் தான். இசைத்தமிழ், இயல்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழ் இருக்கிறது. வேறு எந்த மொழிக்கும் இசை இல்லை, தமிழுக்கு மட்டும் தான் இசைத்தமிழ் என்று இருக்கிறது. எனவே, இசை என்றாலே அது தமிழ் தான். இன்று திரைப்படங்களில் பாடல்கள் குறைந்துக்கொண்டே வருகிறது, சில படங்களில் பாடல்களே வைப்பதில்லை. திரைப்படங்களில் பாடல்கள் இல்லை என்றால் அது தமிழுக்கு தான் ஆபத்து. எனவே, ஒரு பாடலாக படங்களில் வைத்து விட வேண்டும். தமிழர்கள் கலாச்சாரம், பண்பாட்டில் இசையும், பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இங்கு பாடல்கள் இருக்கிறது. எனவே, தமிழர்களின் வாழ்வில் பாடல்களும், இசையும் மிக முக்கியமானது.

ஒரு காலத்தில் மரபு கவிதை எழுதியவர்கள் கூட பிறகு புதுக்கவிதைக்கு மாறிவிட்டார்கள், அதுபோல் நீங்களும் விரைவில் புதுக்கவிதைக்கு மாறிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். இன்று மரபு கவிதைகள் தொலைந்து விட்டது. சாந்தரூபி பாடல்கள் மூலம் இன்று மரபுகவிதைகளையும், இசைப்பாடல்களையும் கேட்க வேண்டிய பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. இங்கு ஒலிபரப்பட்ட மூன்று பாடல்களும் மிக சிறப்பாக இருந்தது. அம்மா பாசம், இளம் பருவ காதல் போன்ற பாடல்கள் மக்கள் கட்டாயம் கேட்க வேண்டிய பாடல்கள். குறிப்பாக “16 வயது பருவம் என்பது பெண்ணுக்கு சோதனையே, கண்ணுக்கும் சோதனையே” போன்ற வரிகள் மூலம் அறியாத வயதில் வரும் காதலைப் பற்றி மிக அழகாக சொல்லியிருந்தார். அதேபோல், தனது தாய்நாட்டை விட்டு வெளியேறிய வலிகளை அனைத்து பாடல்களிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆன்மீக பாடல்களில் கூட அந்த வலியை அவர் வெளிப்படுத்திய விதம் மிக சிறப்பாக இருந்தது. அவருடைய அனைத்து பாடல்களும் நிச்சயம் கேட்க வேண்டிய பாடல்களாக இருக்கிறது. அவர் இங்கே வந்தது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. அவர் இங்கே வந்திருப்பதால் நமக்கு தமிழ் பற்று அதிகமாகியிருக்கிறது. நீங்கள் அடிக்கடி இங்கே வர வேண்டும், நீங்கள் வாழ வேண்டும், ஈழம் வாழ வேண்டும், வாழ்த்துகள் நன்றி.” என்றார்.

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பேசுகையில், “எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து தமிழுக்காக இவ்வளவு பெரிய விசயங்களை செய்து வரும் அம்பாளடியாளை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது. இங்கு நிறைய பேர் பேசும் போது தமிழ் மொழி குறித்த தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அப்படி எல்லாம் கவலைபப்ட தேவையில்லை, தமிழ் என்றுமே அழியாது. இந்த வானத்தையும், வையகத்தையும் தாண்டி கூட தமிழ் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கும். தமிழை யாராலும் அழிக்க முடியாது.

அம்பாளடியாளின் பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவருடைய வரிகள் அனைத்தும் இனிமையாகவும், ஈர்க்க கூடியதாகவும் இருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா மற்றும் பல தமிழ் அறிஞர்கள் அவரை பாராட்டியிருக்கிறார்கள். எங்கேயோ இருந்தாலும் தமிழுக்காக அவர் ஆற்றும் பணியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஈழத்தமிழ் தான் மிக சிறந்த தமிழ் என்று சொன்னார்கள், உண்மை தான். நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, என்னை பார்க்க ஈழத்தமிழர்கள் வருவார்கள், அப்போது அவர்கள் என்னிடம் பேசும் போது அவர்களின் பேச்சை ரசித்து கேட்பேன், அந்த அளவுக்கு சுத்தமான தமிழ் என்றால் அது ஈழத்தமிழ் தான்.

அம்பாளடியாளை பார்க்கும் போது எனக்கு குயிலி என்பவர் தான் நினைவுக்கு வருகிறார். வேலுநாச்சியார் படையில் இருந்தவர் அவர். வெள்ளைக்காரர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்தவர். எந்த அளவுக்கு வீரம் இருந்தால் அவர் அப்படி ஒரு செயலை செய்திருப்பார், அதேபோல் தான் அம்பாளடியாளின் வரிகளிலும் வீரம், காதல் என அனைத்தும் இருக்கிறது. போராட்டக்குணம் கொண்ட வரிகள் பாடல்களில் நிறைந்திருக்கிறது. ஈழத்தில் எத்தனையோ போராட்டங்களையும், வலிகளையும் தாண்டி வந்திருந்தாலும், தமிழுக்கு அவர் செய்யும் மகத்தான பணி மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இசை ஆல்பத்தில் 50 பாடல்களை எழுதியிருக்கிறார், இன்னும் பல பாடல்களையும், புத்தகங்களையும் எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் திரைத்துறையிலும் பாடலாசிரியராக வர வேண்டும். ஏராளமான பெண் கவிஞர்கள் இருந்தாலும், திரைத்துறையில் பாடலாசிரியர்களாக இருப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கிறார்கள். அதனால், தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதை மாற்ற வேண்டும், அம்பாளடியாள் போன்றவர்கள் திரைத்துறையிலும் பாடல்கள் எழுத வேண்டும், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here