முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார்

மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தை YNOT ஸ்டுடியோஸ் பேனரில் தயாரித்து இயக்குகிறார் எஸ். சஷிகாந்த்

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட பல வெற்றிகரமான மற்றும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிகுந்த தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கதை சொல்லலில் ஆழ்ந்த ஆர்வம், திறமைகளை கண்டறிவதில் மிகுந்த ஈடுபாடு, புதிய முயற்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றால் இதுவரை அறியப்பட்ட எஸ்.சஷிகாந்த்தின் திரைப்பட இயக்கத் திறமையை பறைசாற்றவுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சக்ரவர்த்தி ராமச்சந்திரா கூறுகையில்,

“பத்தாண்டுகளுக்கும் மேலாக சஷியுடன் பணியாற்றியுள்ள நான் சரியான கதைகளைக் கண்டறிவதில் அவருக்கு இருக்கும் திறமையையும், சிறு விவரங்கள் மீதும் அவருக்குள்ள பேரார்வத்தையும் நன்கறிவேன். மிகவும் ஈர்க்கக்கூடிய கதையம்சம் கொண்ட ‘டெஸ்ட்’, சஷியின் அசாத்தியமான கதை சொல்லும் திறமை, சிறந்த வடிவமைப்பு உணர்வு, மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் புதிய கண்ணோட்டம் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். சஷி இயக்குநராக அறிமுகமாகும் படத்தை தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. YNOTன் முதல் தயாரிப்பின் போது இருந்ததைப் போலவே இப்போதும் மிகுந்த உற்சாகமாக இருக்கிறோம்,” என்றார்.

ஆர்.மாதவன் கூறுகையில், “சஷி இயக்குநராக அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி. கட்டிட வடிவமைப்பு கலைஞராக இருந்து வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறிய அவர், இப்போது இயக்குநராகவும் அவதாரம் எடுப்பதை பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது. ‘இறுதி சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு YNOT உடனான எனது மூன்றாவது படமான ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

சித்தார்த் கூறுகையில், “ஒரு அற்புதமான தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர் மற்றும் அன்பான நண்பராக சஷியை எனக்கு தெரியும். அவரை இயக்குநராக பார்க்க ஆவலாக உள்ளேன். இந்த ‘டெஸ்டில்’ அவர் சிறப்பாக தேர்ச்சி பெறுவார் என நான் நம்புகிறேன். இப்படத்தில் எனது பங்களிப்பு குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளேன்,” என்றார்.

நயன்தாரா கூறுகையில், “சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் சிறந்த திறமைகள், தரமான கதைகள் உள்ளிட்டவற்றுக்கு சான்றாக திகழ்கின்றன. சஷிகாந்தின் அசாத்தியமான திறமையை பற்றி பல சகாக்களிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய தனித்துவமான பார்வையும், கதை சொல்லும் திறமையும் இந்தப் படத்தை அமோக வெற்றியடைய செய்யும் என்பதில் சந்தேகமில்லை. YNOT தயாரிப்பில் சஷிகாந்தின் இயக்கத்தில் உருவாகும் முதல் படமான ‘டெஸ்ட்’டில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், சிறப்பான கதாபாத்திரத்தில் இப்படத்தில நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார்

எஸ்.சஷிகாந்த் கூறுகையில், “ஒரு கட்டிடக் கலைஞராக இருந்து தயாரிப்பாளராக மாறியதால், கதை சொல்லும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். இந்தத் துறையில் உள்ள திறமையான திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றும் அதிர்ஷ்டம் பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்து வருகிறது. அவர்களது அர்ப்பணிப்பு நிலையான உத்வேகமாக எனக்கு இருந்து வருகிறது. இப்போது, ஒரு இயக்குநராக எனது புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது, எனது கண்ணோட்டத்தை திரையில் கொண்டு வரவும், பார்வையாளர்களை சென்றடையும் கதைகளை கூறவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அசாதாரண திறமை கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளனர். அவர்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு தயாரிப்பாளராக என் மீது இத்தனை ஆண்டுகளாக திரையுலகம், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனது புதிய முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

மனித உணர்வுகளின் உன்னதத்தை விவரிக்கவுள்ள ‘டெஸ்ட்’, விளையாட்டுத்திறன், தோழமை உணர்ச்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை மையப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு கதையாகும். பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர்த்தி அவர்களின் இதயங்களை தொடும் படமாக இது இருக்கும். சென்னை மற்றும் பெங்களூரில் ஜூலை 2023 வரை படப்பிடிப்பு நடைபெறும். 2024 கோடை காலத்தில் உலகளவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும்.

இத்திரைப்படம் பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு #theTEST உடன் இணைந்திருங்கள்.

YNOT ஸ்டுடியோஸ் பற்றி

எஸ். சஷிகாந்தால் 2009ம் ஆண்டு நிறுவப்பட்ட YNOT ஸ்டுடியோஸ், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சென்னையில் இருந்து இயங்கும் YNOT ஸ்டுடியோஸ், கடந்த 13 ஆண்டுகளாக உயர்தர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களை தயாரித்து விநியோகித்து வருகிறது. ‘இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘மண்டேலா’ மற்றும் பல திரைப்படங்கள் அதன் குறிப்பிடத்தக்க தயாரிப்புகளில் அடங்கும். புதுமையான கதைசொல்லல், துணிச்சலான கருப்பொருள்கள் மற்றும் அற்புத திறமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியத் திரைப்படத் துறையில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரிப்பதில் YNOT ஸ்டுடியோஸ் நற்பெயரைப் பெற்றுள்ளது. 2021ம் ஆண்டில் ‘மண்டேலா’ (தமிழ்) திரைப்படத்திற்காக தயாரிப்பாளராக ‘சிறந்த அறிமுகப் படத்திற்கான இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருது’ உட்பட ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் இந்நிறுவனம் வென்றுள்ளது. தயாரிப்பாளர் திரு.எஸ்.சஷிகாந்த் தேசிய விருதை பெற்றார். புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு திரைப்படத் துறையின் எல்லைகளை விரிவுப்படுத்துவதிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் கதைகளை வழங்குவதிலும் YNOT ஸ்டுடியோஸ் உறுதியாக உள்ளது.

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/studiosynot

ட்விட்டர்: https://twitter.com/studiosynot

யூடியூப்: https://www.youtube.com/@ynotstudios
முகநூல்: https://www.facebook.com/ynotstudios

மின்னஞ்சல்: [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *