ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே‘. இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் மதும்கேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார். மேலும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பட தொகுப்பு பணிகளை முத்தையன் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம் குமார் தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளரான பிரபா பிரேம்குமார்- ஏராளமான குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி அளித்திருக்கும் இவர், திரைப்படத்துறையின் மீதான ஆர்வத்தால் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘கிளாப்’ எனும் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போது ‘அடியே’ படத்தின் மூலம் நேரடியாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தையும் தயாரித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐந்திற்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான பட்ஜெட் படைப்புகளையும் தயாரிக்கும் திட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன் மல்ட்டி வெர்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் காதலை சொல்வதில் ‘அடியே’ திரைப்படம் தான் முதல் படைப்பு. இத்திரைப்படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதன் இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக தோன்றுவது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும் ” என்றார்.

‘அடியே’ படத்தின் மோசன் போஸ்டரில்… இலங்கை பிரதமர் சீமான் மெட்ராஸ் வருகை… ‘யோகன் அத்தியாயம் 1’ 150 நாள் போஸ்டர்.. ‘தல’ அஜித் குமார் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 பந்தயத்தில் ஐந்தாவது முறையாக வென்றிருப்பது… தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் புது கட்டிட திறப்பு விழா.. விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார்… சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் 3.0…என மல்ட்டி வெர்ஸ் உலக கலாட்டாவை.. புதிய தொழில்நுட்ப பின்னணியுடன் விவரித்திருப்பதும், இதனூடாக நாயகன் ஜீ வி பிரகாஷ் குமார் அப்பாவியாகவும், அர்த்தமுள்ள பார்வையுடனும் தோன்றுவது.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“The Great Escape” ஹாலிவுட் படம் தமிழில் வருகிறது!
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன் பாகம்-2 தமிழ் திரைப்பட விமர்சனம்