‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் – காயத்ரி

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்‘ எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும் தொடர் குறித்த விமர்சனங்களையும் வெளியிட்டதற்காக இந்த தொடரை உருவாக்கிய படைப்பாளிகள் புஷ்கர்- காயத்ரி தம்பதியினர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

புஷ்கர் மற்றும் காயத்ரியின் இலட்சிய படைப்பாக உருவானது தான் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர். இந்த தொடர் கண்ணைக் கவரும் காட்சிகளுக்காகவும், பரபரப்பான திரைக்கதைக்காகவும், வித்தியாசமான கதைகளத்திற்காகவும் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. இந்த தொடரைப் பற்றி இணையவாசிகள் மட்டுமல்லாமல் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களும் ‘சுழல் தி வோர்டெக்ஸ் ‘ அமேசான் பிரைம் வீடியோவில் இடம்பெற்ற கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று’ என தெரிவித்திருக்கிறார்கள். இந்த பிரபலங்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, ஹிருத்திக் ரோஷன், எஸ். எஸ். ராஜமௌலி, விக்கி கௌஷல் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இது தொடர்பாக இந்தத் தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர்- காயத்ரி பேசுகையில், ” எங்களது ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடருக்கு இந்திய திரையுல பிரபலங்களிடமிருந்து கிடைத்த பாராட்டு ஆதரவு, அன்பு ஆகிய அனைத்திற்கும் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறோம். திரையுலகில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சக நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என பலரும் இந்த தொடரை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி ரசிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தத் தொடர் எட்டு அத்தியாயங்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலானது. ஆனால் அனைவரும் இதற்காக தங்களது நேரத்தை செலவிட்டு பார்த்து ரசித்ததுடன், அது தொடர்பான நேர்மறையான செய்திகளை சமூக வலை தளத்தில் பதிவிட்டு எங்களை உற்சாகப்படுத்தினர். இது நாங்கள் முற்றிலும் எதிர்பாராத ஒரு விசயம். ஒரு வாரம் கழித்து நடைபெறும் என நினைத்திருந்தோம். ஆனால் இந்த தொடர் வெளியான குறுகிய காலகட்டத்திற்குள் இந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எங்கள் திரை துறையிலிருந்து சக படைப்பாளிகள் மற்றும் நட்சத்திரங்கள் அளித்த வரவேற்பிற்காகவும், ஆதரவிற்காகவும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ” என்றனர்.

ஜூன் 17ஆம் தேதி முதல் 30க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here