பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மேலும் தரமான படம் ’டாணாக்காரன்’

மக்களுக்காக தரமான படங்களை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’. ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்புகளைக் குவித்து வரும் ‘டாணாக்காரன்’ படமும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்புக்கு ஓர் உதாரணம்.
மக்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி, சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்களும் ‘டாணாக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தற்போது ‘டாணாக்காரன்’ படத்துக்கு மேலும் ஒரு பெருமைக் கிடைத்துள்ளது.


தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் ’டாணாக்காரன்’ திரையிடப்பட்டுள்ளது. அங்குப் பயிற்சி பெற்று வரும் காவலர்கள் அனைவருமே படத்தை கண்டுகழித்துள்ளனர். காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள அரசியலை முன்வைத்து ‘டாணாக்காரன்’ படம் உருவாக்கப்பட்டது. அதில் பயிற்சி பெறும் எந்த மாதிரியான மனநிலையில் காவலர்கள் இருக்க வேண்டும் என்பதையும் காட்டியது.
’டாணாக்காரன்’ திரையிடலைப் பார்த்துவிட்டு காவலர்கள் பலரும் இயக்குநர் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மேலும், இப்போது புகார் பெட்டி, டாய்லெட் வசதிகள் என எந்த அளவுக்குக் காவலர் பயிற்சி பள்ளி மாறியிருக்கிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.


சென்னையில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற ’டாணாக்காரன்’ திரையிடலில் இயக்குநர் தமிழ் கலந்து கொண்டார். இது தொடர்பாக இயக்குநர் தமிழ் “ஒரு படத்துக்குப் பட்ட கஷ்டம் எல்லாமே, அதன் வெற்றியில் காணாமல் போய்விடும் என்பார்கள். அப்படியான சந்தோஷத்தில் தான் இருக்கிறேன். திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், மக்கள் எனப் பலரும் ‘டாணாக்காரன்’ படத்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். இன்னும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
‘டாணாக்காரன்’ கதையை எதற்காக எழுதினேனோ, அதற்கான விஷயமும் நடைபெற்றதில் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காவலர் பயிற்சி பள்ளியை முன்வைத்து எழுதிய கதையை அங்கே பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்கள். அவர்கள் அனைவரும் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். முன்பு காவலர் பயிற்சி பள்ளி எப்படியெல்லாம் இருந்தது என்பதைக் காட்டியுள்ளீர்கள். ஆனால் இப்போது புகார் பெட்டி உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வைத்து மாற்றியுள்ளோம் என்று கூறினார்கள்.


காவல்துறை பயிற்சி பள்ளிக்கு எந்த மாதிரியான மனநிலையுடன் வரவேண்டும் என்பதை மிகவும் அருமையாகக் காட்டியிருந்தீர்கள் என்று பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பாராட்டியதை மறக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ‘டாணாக்காரன்’ திரையிட ஆணையிட்ட பயிற்சி ஐ.ஜி அருள் ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் பயிற்சி பள்ளி விஷயங்களை மிகவும் தத்ரூபமாகப் படமாக்கியிருந்ததாக மிகவும் பாராட்டினார்.


இந்தப் படத்தின் கதையினை எவ்வித சமரசமும் இன்றி எடுக்க உறுதுணையாக இருந்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம், விக்ரம் பிரபு சார், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார், போஸ் வெங்கட் சார் உள்ளிட்ட ஒட்டுமொத்த ‘டாணாக்காரன்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here