2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு, காதல் மற்றும் அந்தக் காலத்தின் இனிமையான நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2K காலகட்டத்தின் அழகான நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் வாக்மேன், ஹெட்போன், ஓவியப் பொருட்கள், காகித விமானம் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளையும், இசையோடு இணைந்த நினைவுகளையும் பிரதிபலிக்கும் வாக்மேன் போஸ்டரில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ‘சூர்யா’, ‘சில்வியா’ என்ற பெயர்கள் எழுதப்பட்டுள்ள பொருளும் அந்தக் காலத்து இளம் வயதுக் காதலின் உணர்வுகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

செல்போன்கள் அன்றைய அளவுக்குப் பயன்பாட்டில் இல்லாத காலகட்டத்தில், வாக்மேன் உள்ளிட்ட இசைச் சாதனங்கள் வழியாகவும், நேரடி சந்திப்புகள் மற்றும் கடிதங்கள் மூலமாகவும் காதலர்கள் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட விதத்தை இப்படம் பேசுகிறது. பள்ளிப் பருவத்தின் நட்பு, முதல் காதல், அன்றைய மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என 2000-களின் தொடக்க கால வாழ்க்கையை இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீண்டும் திரும்பிபார்க்கும் விதமாகவும், அசைபோடுவதாகவும்,இன்றைய தலைமுறையினருக்கு அன்றைய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் விதமாகவும் இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை இயக்கும் முத்துராம் முருகன், முன்னதாக ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் செல்வராஜ் எழுதியுள்ளதுடன், தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.எல். ரமேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சகிஷ்னா சேவியர் இசையமைக்கிறார். இன்பா பிரகாஷ் கலை இயக்கத்தையும், டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளையும், கலைக்குமார் நடன இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் ராம்ஜி, பக்ஸ், மைதிலி, சந்திரன், நசாத், துஷார், ஆஷா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது நெய்வேலி பகுதியில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2K காலகட்டத்தின் காதல், நட்பு மற்றும் மறக்க முடியாத நினைவுகளைத் திரையில் கொண்டுவரும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Yourslovingly

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைசென்னையில் சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜை தொடங்கி வைத்த பத்மஸ்ரீ ஜெயராம்
அடுத்த கட்டுரைஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்