‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது வழங்கி கௌரவம்

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்‘ எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘டோக்கியோ திரைப்பட விருது’ எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த ‘டோக்கியோ திரைப்பட விருது’ சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டோக்கியோ திரைப்பட விருது , ஆசியாவின் சிறந்த படமாக ‘மாமனிதன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.

‘யதார்த்த வாழ்வியல் இயக்குநர்’ சீனு ராமசாமி இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடத்தில் பேராதரவையும், பெரும் வரவேற்பையும் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற ‘மாமனிதன்’, திரை அரங்குகளில் வெளியான குறுகிய காலகட்டத்தில் ‘ஆஹா’ ஓ. டி. டி. எனப்படும் ஆஹா டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி, ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையை படைத்தது. இப்படம் வெளியானவுடன் ஏராளமான சர்வதேச விருதுகளை ‘மாமனிதன்’ பெறுவான் என திரையுலகினர் கணித்தனர். அதற்கேற்ற வகையில் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று வரும் ‘மாமனிதன்’, தற்போது டோக்கியோ திரைப்பட விருதையும் வென்று புதிய சாதனையப் படைத்திருக்கிறது.

சிறந்த திரில்லர், சிறந்த ஆக்சன், சிறந்த நகைச்சுவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதியான  படைப்புகளையும், திறமையான கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதும், பதக்கமும் வழங்கி கௌரவித்து வரும் டோக்கியோ திரைப்பட விருதுகளில், இந்த ஆண்டு ஆசியாவில் வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாக ‘மாமனிதன்’ திரைப்படத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

டோக்கியோ திரைப்பட விருதை வென்ற மாமனிதன் பட குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் ஏனைய இந்திய திரை உலகினரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here