பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி,
ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபியா துலிபாலா முதலானோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூறுகையில், “

எங்கு போனாலும் முதலில் மணிரத்னம் சார் உங்களுக்கு தான் நன்றி சொல்லச் சொன்னார். மக்கள் என்னதான் கொண்டாடினாலும் பத்திரிகையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. படத்தின் ஒவ்வொரு விசயத்தையும் தனித்தனியாக குறிப்பிட்டு பாராட்டி, எழுதியது நீங்கள் தான். மேலும் பூங்குழலி பாத்திரத்தை தனியாக குறிப்பிட்டு பாராட்டி எனக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி.
ஆரம்பத்தில் நான் வானதி வேடத்தில் நடிக்க இருந்தேன், பின்னர் எனக்கு திரை நேரம் குறைவாக இருந்தாலும், பூங்குழலி பாத்திரம் எனக்கு பிடித்தது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் எனக்கு உறுதுணையாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் எனது பணியை பாராட்டியுள்ளனர். நிறைய மகிழ்ச்சி மற்றும் பொறுப்பு கூடியிருக்கிறது முதல் பாகம் போல் இரண்டாம் பாகமும் உங்களை கவரும் என்றார்.

நடிகை ஷோபிதா கூறுகையில்,

தமிழில் இது எனக்கு முதல் படம், முதல் படத்திலேயே ஒரு நடிகையாக இதுபோன்ற அருமையான கதாபாத்திரம் மற்றும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்படியான பிரமாண்டமான படைப்பில் நான் இருப்பது மகிழ்ச்சி எங்களுக்கு முழு ஆதரவு தந்த உங்களுக்கு மிக்க நன்றி என்றார்.

இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் விக்ரம் பிரபு,

“இது இரண்டாம் பாகம் என்றாலும், இந்த திரைப்படம் பற்றி ஏற்கனவே பகிர்ந்து விட்டோம் இப்போது அனைத்தையும் புதிதாகப் பகிர்வது போல் உள்ளது. இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. மணி சார் இப்பாத்திரத்தை எனக்கு வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி. இந்தப் படத்தை வெற்றியடையச் செய்ததற்காக பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் உலகத் தமிழர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அதேபோன்ற ஆதரவை இரண்டாம் பாகத்திற்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.”

நடிகர் ஜெயம் ரவி பேசுகையில்,

“ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூறியது போல், இந்த திரைப்படத்திற்கும் எங்கள் நடிப்பிற்கும் இவ்வளவு அன்பையும் ஆதரவையும் காட்டிய தமிழ் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். பார்வையாளர்கள் பெற்றோர்களைப் போன்றவர்கள், ஆனால் விமர்சகர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள், உங்களின் வழிகாட்டுதலில் தான் தமிழ் சினிமா வளர்கிறது. PS1 நிறைய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியது PS2 இல் முதல் காட்சியில் இருந்தே ஒரு க்ளைமாக்ஸ் உணர்வைத் தரும். இரண்டாம் பாகத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். முதல் படம் பார்த்து விட்டு ரஜினி சார் போன் பண்ணி பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். முதல் பாகத்தின் விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டங்களின் அடிப்படையில், நாங்கள் இரண்டாவது பகுதியை மேம்படுத்தியுள்ளோம். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நான் நம்புகிறேன்.

நடிகர் கார்த்தி கூறுகையில்,

“இதுபோன்ற அற்புதமான படைப்பை எங்களுக்கு வழங்கிய கல்கிக்கு நன்றி. படத்தில் நான் உட்பட அனைவருக்கும் நிறைய சவால்கள் இருந்தது. எம்ஜிஆர் முதல் கமல் சார் வரை பலர் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்ற போது , நிறைய அழுத்தங்கள் இருந்தது. ஆனால் இந்தப்படத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் கொட்டி உழைத்தேன். எல்லோரும் உங்களைத்தவிர வந்தியத்தேவனாக யாரையும் நினைக்க முடியவில்லை என்ற போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மெலும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் தந்த ஆதரவு மிகப்பெரியது. முதல் முறையாக என்னுடைய படம் பார்த்து என் அம்மா பாராட்டினார்கள். பிரகாஷ் ராஜ் சார், சிலம்பரசன் மற்றும் நம்பி நாராயணன் சார் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் என்னை நேரில் அழைத்து எனது நடிப்பைப் பாராட்டினார்கள். இதற்கு காரணம். பழம்பெரும் எழுத்தாளர் கல்கியின் எழுத்து தான். படத்தைப் பற்றி ஏற்கனவே நிறையப் பேசிவிட்டோம்.இதன் க்ளைமாக்ஸ் மட்டும்தான் சொல்லவில்லை. வந்தியத்தேவனுக்கு இதில் நிறைய வேலைகள் இருக்கிறது. குந்தவை மற்றும் நந்தினி பாத்திரங்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் மீண்டும் சந்திக்கும் காட்சிகள் இந்த பாகத்தில் வரும். எனது நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்திற்கும் வந்தியத்தேவனுக்கும் இடையே ஒருவித ஒற்றுமை உள்ளது, ஏனெனில் இருவரும் உடனடியாக எல்லோருடனும் நட்பு கொள்ளும் குணம் கொண்டவர்கள். முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் கதையில் உணர்வுகள் அதிகமாக இருக்கும் என்றார்.

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பேசுகையில்,

பத்திரிகை ஊடகத் துறையினருக்கும், எப்போதும் முழு ஆதரவளிக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. எனது கதாபாத்திரத்திற்கு அதிக காட்சிகள் இருக்கும். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்குமான காதல் காட்சிகள் இந்த பாகத்தில் இருக்கும். குந்தவை பாத்திரம் இந்த அளவு வரவேற்பை பெறும் என நினைக்கவில்லை. ஸ்கூல் காம்படிசனில் குந்தவை வேடம் போடுவது முதல் குந்தவை போல் அலங்கரிப்பது வரை எல்லோரும் குந்தவையை கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்பாகம் முதல் பாகத்தை விட சூப்பராக இருக்கும்.

இயக்குநர் மணிரத்னம் கூறுகையில்,

“கல்கி, கதாபாத்திரங்களை மிகவும் கச்சிதமாக உருவாக்கியுள்ளார். புத்தகத்திலிருந்து எதையும் மாற்ற்வில்லை. அனைத்து கதாபாத்திரங்களையும் அவர் உருவாக்கியிருந்த விதம், எங்கள் வேலையை எளிதாக்கியது. இரண்டாம் பாகம் முதல் பாகத்திலிருந்து தொடங்கும். போர் காட்சிகள் நிறைய இருக்கும். முதல் பாகம் அறிமுகம் தான் இதில் தான் கதையே முழுதாக வரும். பாடல்களுக்கோ காமெடிக்கோ இடமில்லை. கல்கி எழுதியதை முடிந்த அளவு திரையில் கொண்டு வர முயற்சித்துள்ளோம். தொழில்நுட்ப வல்லுநர்கள் படத்தின் தூண்கள். உணர்வுகளை இசையாக மாற்றுவது எப்படி என்பது ஏஆர் ரஹ்மானுக்குத் தெளிவாகத் தெரியும். அவரில்லாமல் படமில்லை” புத்தகத்தில் உள்ளதைப் போன்ற விடை தெரியாத கேள்விகள் இருக்குமா என்றால், “படத்திலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளம் இருக்கும்” ஒரு வகையில் நம் வாழ்க்கையே அப்படித்தானே. புத்தகத்தில் கரிகாலனைச் சுற்றி வரும் மர்மங்கள் குறித்து தெரிந்து கொள்ள, ​​“ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் பாருங்கள்” என்றார் மணிரத்னம் கூறினார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here