யசோதா’ படத்தின் கதை நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நிச்சயம் மதிப்புமிக்கதாக அமையும்- நடிகை வரலட்சுமி சரத்குமார்!

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

’யசோதா’ கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்?Varalaxmi Sarathkumar About Yashoda

முதலில் இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன். ட்ரைய்லரில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும். கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

படப்பிடிப்பின் போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?

பெரிய சவால்கள் எதுவும் இல்லை. சமந்தாவை போல பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் எனக்கு இல்லை. நடிகையாக மிகவும் அமைதியான கதாபாத்திரம் எனக்கு. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது எனக்கு நானே சவாலாக எடுத்து கொள்வேன்.

எந்த ஒரு விஷயம் ‘யசோதா’ படத்திற்கு உங்களை சம்மதிக்க வைத்தது?

என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும். இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு.

இந்தக் கதையில் நீங்கள் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா?

இல்லை. ட்ரைய்லரில் நீங்கள் பார்த்தது போல வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக்கூடிய ஒருவள். என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.

ஹரி & ஹரிஷூடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?

இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இதுபோன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும். ‘யசோதா’ படத்தில் இருக்கும் பல கதாபாத்திரங்களை பெண்கள் தங்களோடு ஒப்பிட்டுக் கொள்வார்கள்.

படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி சொல்லுங்கள்?

படத்தின் ஒளிப்பதிவை மிக அழகாக சுகுமார் கையாண்டிருக்கிறார். இந்தப் படத்தில் இசை மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. மணிஷர்மா சார் அதைத் திறமையாக செய்திருக்கிறார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு படம் நிச்சயம் மதிப்பு மிக்கதாக அமையும். திரையில் பார்த்து அனுபவிக்கும் வகையிலான காட்சிகளும் கதையும் இருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் சார் மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டை இந்தப் படத்திற்காகக் கொடுத்திருக்கிறார். படத்தில் அசோக்கின் செட் பார்க்கும் போதே தெரிய வரும்.

வாடகைத்தாய் குறித்தான நிறைய விவாதங்கள் தற்போது இந்தியாவில் போய்க் கொண்டிருக்கிறது. படம் அதை பற்றியதாக இருக்குமா?

வாடகைத்தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது. வாடகைத்தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.

’யசோதா’ படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது?

என்னுடைய கதாபாத்திரத்தின் ஆழம் பிடிக்கும். யசோதா கதாபாத்திரம் மிகவும் வலுவானது. சமந்தா அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்குப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் பிடிக்கும். ஏனென்றால் கதைதான் படத்தின் ஹீரோ.

சமந்தாவுடன் முதல் முறையாக வேலைப் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?

சமந்தாவை சென்னையில் சந்தித்ததில் இருந்து கடந்த பத்து- பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில அவர் வாழ்ந்திருக்கிறார்.

உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

‘க்ராக்’ படத்தில் ஜெயாம்மா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு நடிப்பதற்குப் பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. எனக்காக சிறப்பான கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று. தெலுங்கு படங்களுடன் இப்போது நான் நன்றாக ஒன்றி விட்டேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது இல்லை என்பதும் ஆறுதல்.

உங்களுடைய அடுத்த படங்கள் என்னென்ன?

‘சபரி’ படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நந்தமூரி பாலகிருஷ்ணா சாரின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறேன் மற்றும் சில படங்கள் கைவசம் இருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here