அதிர்ச்சி தகவல் – ‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும்

‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசூல் ரீதியாக, இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையை ‘சர்கார்’ செய்துள்ளது. இரண்டு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து, பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலக அளவிலும் இந்தப் படத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேசமயம், இந்தப் படத்தில் அதிமுக.வினருக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அதிமுக.வினர் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கும் வரலட்சுமிக்கு, ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி பெயரைச் சூட்டியிருப்பது, அதிமுக.வினரைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. எனவே, ‘சர்கார்’ ஓடும் திரையரங்குகள் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் காசி, ஆல்பர்ட், தேவி ஆகிய திரையரங்கங்கள் உள்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ‘சர்கார்’ படத்தின் பேனரைக் கிழித்தும், போஸ்டரைத் தீயிட்டுக் கொளுத்தியும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என விநியோகஸ்தர் மற்றும் கோவை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“சர்கார் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி மற்றும் படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியோரிடம் பேசினேன். அவர்களும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர்.

என்னென்ன காட்சிகளை நீக்குவது என்பது குறித்து இன்று இரவு முடிவெடுக்கப்பட்டு, நாளையில் இருந்து காட்சிகள் நீக்கப்பட்டுப் படம் திரையிடப்படும். திரையரங்குகளில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *