சர்கார் திரைப்படம் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளர் எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்!

சர்கார் திரைப்படம்  மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம்
அதற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் அரசியல் பிழை செய்தோர் ஆவர்!
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளர்
எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநாகரிக செயலாகும்.
சர்கார் திரைப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையின்றி வெளிவந்த வேலையில் அத் திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்க சொல்லி போராடுவது சட்டவிரோத செயலாகும்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்படிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதை தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு “பொண்டாட்டி காரன் பொண்டாட்டிய அடிக்க திண்னையில் கிடக்கிறவன் தேமி..தேமி.. அழுதானாம்” அதுபோல படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும், நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் ஒரு இயக்குநர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது! அ.தி.மு.க. வினர் கொதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?
அவர்களின் அரசியல் அடவாடியெல்லாம் திரைப்படங்கள் வழி தெரிந்து விடுகிறதே என்றா?
சர்கார் திரைப்படம் “ஒட்டு மொத்த இன்றைய அரசியலை” தோலுரித்து காட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழிப்புணர்வை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள் என்று அ.தி.மு.க. அராஜகம் செய்கிறதா?
இவ்வாறு செய்வீர்களேயானால் இன்னும் இது போல் இன்னும் ஆயிரமாயிரம் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் அதையாரும் தடுக்க முடியாது. போலி அரசியலின் முகமூடி இதுபோன்ற படங்களில் வழியாகத்தான் கிழிந்து தொங்கும். அதை மக்களும் விரும்புவார்கள்!
சட்டபடியாக தணிக்கைபெற்ற இத்திரைப்படத்தை அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்க நினைப்பது, வசனங்கள் – காட்சிகளை நீக்கச் சொல்வது, கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான செயல்பாடாகும்.
இச்செயலை வன்யாகக் கண்டிக்கிறேன். இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் ஒட்டுமொத்தத் திரைப்படத்துறையும் இணைத்து பெரும் போராட்டத்தை தொடங்குவோம்!
இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ.,கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *