80, 90களில் நம்மை மகிழ்வித்த காஜா ஷெரீஃப்-ஐ மறக்க முடியுமா !!!

காஜா ஷெரீஃப் இவர் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சார்ந்தவர். இராமநாதபுரம் மாவட்டம் கமல், விக்ரம், ராஜ்கிரண் போன்ற முன்னணி கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அது போல இவரும் சினிமாவில் பேசப்பட்ட வேண்டிய கலைஞராவார்.

ஏனென்றால் 80களில் இருந்து 90கள் வரை அப்போதைய விஜய் சேதுபதி போல காஜா ஷெரீஃப் நடிக்காத படங்களே இல்லை எனலாம்.

துண்டு துக்கடா வேடங்கள் என்றாலும் சரி, கனமான கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, நகைச்சுவை பாத்திரங்கள் என்றாலும் சரி இவர் நடிக்க தவறியதே இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலும் நன்றாக நடிக்க கூடியவர் ஏனென்றால் இவர் படித்தது பாக்யராஜ் ஸ்கூலில்.

ஸ்கூல் என்றால் பாக்யராஜ் சொல்லி கொடுத்த திரைப்பாடம் அதை குறிப்பிட்டேன். பாக்யராஜின் பட்டறையில் இவர் வளர்ந்ததால் இவர் நடிப்பில் பிய்த்து உதறினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் பாரதிராஜா இயக்கி பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த புதிய வார்ப்புகள் படத்தில்தான் காஜா ஷெரிஃப் அறிமுகமானார்.

தொடர்ந்து பாக்யராஜின் படங்களான சுவரில்லாத சித்திரங்கள், அந்த ஏழு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது மனதை கவர்ந்தார் யார் இந்த சிறுவன் இப்படி நடிக்கிறானே என ஆச்சரியப்பட வைத்தார்.

குறிப்பாக அந்த ஏழு நாட்கள் படம் மிகவும் சீரியசான கதை கொண்ட படம் அந்த படத்தில் ஆஸானே ஆஸானே என படம் முழுவதும் பாக்யராஜை அழைத்து கலகலப்பூட்டி இருப்பார்.

ஏடா கோபி என பாக்யராஜ் அழைப்பதும் ஆசானே என காஜா ஷெரிஃப் அழைப்பதும் இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி அப்போ செம ஒர்க் அவுட் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாக்யராஜ் ஆடையை எல்லாம் கழற்றி காஜா ஷெரிஃபை பார்த்து கொள்ள சொல்லி குளித்து கொண்டிருக்க, வெளியில் எங்கோ சாவு ஊர்வலம் தாரை தப்பட்டை அடித்து செல்ல அந்த தாரை தப்பட்டை சத்தம் கேட்டு நிர்வாணமாக குளித்து கொண்டிருந்த பாக்யராஜை விட்டு விட்டு காஜா ஷெரிஃப் டான்ஸ் ஆடிக்கொண்டே செல்ல பாக்யராஜ் டிரஸ் இல்லாமல் செய்வதறியாது தவிப்பார். ஒரு வழியாக காஜா ஷெரிஃப்ஃபை பார்த்த உடன் அடியை போட்டு வெளுத்து விடுவார். இதில் எல்லாம் காஜா ஷெரிஃப் குறும்புத்தனத்தின் உச்சிக்கே சென்று இருப்பார் என சொல்லலாம்.

அது போல் பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் டெய்லரான கவுண்டமணியிடம் காஜா போடும் பையனாக சிறுவயதிலேயே சிகரெட் எல்லாம் அடிக்கும் குறும்புத்தன பையனாக நடித்திருப்பார். கவுண்டமணி கடையில் உட்கார்ந்து ஏதாவது தைத்துக்கொண்டே பேச அதை எல்லாம் மனதிற்குள் முனகிக்கொண்டே நக்கல் செய்வதும் கவுண்டமணியிடம் அடிவாங்குவதும் காஜா ஷெரிஃபின் வேலை.

கமல் நடித்த காதல் பரிசு படத்தில் கமலுக்கு சால்ட் கோட்ட சிலுவை என்ற கதாபாத்திரம் அதில் கமல் உடன் வரும் குப்பத்து பையனாக காஜா ஷெரிஃப் கலகலப்பூட்டி இருப்பார்.

ரஜினி நடித்த காளி, நான் சிகப்பு மனிதன் இன்னும் எண்ணற்ற படங்களில் ரஜினியுடன் காஜா ஷெரிஃப் நடித்துள்ளார்.

மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படத்தில் சிறு குழந்தை நட்சத்திரமாக அருமையான வேடம் இவருக்கு.

இவர் பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ், பாலு மகேந்திரா, எஸ்.ஏ சந்திரசேகர், விசு என முன்னணி இயக்குனர்கள் படங்களில் எல்லாம் காஜா ஷெரிஃப்க்கு ஒரு முக்கிய வேடம் கண்டிப்பாய் உண்டு. பல படங்களில் ஹீரோக்களின் சிறு வயது கதாபாத்திரத்தில் காஜா ஷெரிஃப்தான் நடித்திருப்பார்.

காஜா ஷெரிஃப் நடிப்பில் சிறப்பான பல படங்களை கூறிக்கொண்டே இருக்கலாம். இருந்தாலும் எல்லாருக்கும் தெரிந்த படம் சம்சாரம் அது மின்சாரம். இப்படத்தில் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ண முடியாமல் தவிக்கும் வேடத்தில் காமெடியாக கலக்கி இருப்பார். முதலில் காமெடியாக வரும் ஃபோர்ஷன்ஸ் எல்லாம் அவர் பாஸ் செய்த பிறகு சீரியஸாக வரும். சீரியஸான அந்த காட்சிகளிலும் அழகாக நடித்திருப்பார்.

அஜீத் நடித்த சிட்டிஸன் படத்தில் நடித்திருப்பார் அதன் பிறகு இவர் சொல்லிக்கொள்ளும்படி சினிமாக்களில் வரவில்லை என சொல்லலாம். சரத்குமார் நடித்த 2006ல் வந்த தலைமகன் படத்துக்கு பிறகு இவர் சுத்தமாக நடிக்கவில்லை.

90களின் ஆரம்பத்திலேயே அப்போதைய சிறு வேட நடிகர்களான உசிலைமணி, ஓமக்குச்சி, கிங்காங், தவக்களை இது போல சிறு சிறு காமெடி நடிகர்களை வைத்து பல கிராம கோவில் திருவிழாக்கள், கிராம முளைப்பாரி திருவிழா, கோவில் கொடை விழாக்கள், தீ மிதி திருவிழா, சந்தனக்கூடு திருவிழா என பல திருவிழாக்களில் சின்ன சின்ன காமெடி நடிகர்களை ஒன்றினைத்து நட்சத்திர இரவு என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார்.

தற்போதும் சிறு நடிகர்களை வைத்து நட்சத்திர கலைவிழாக்கள் வெளிநாடுகள் சில வற்றில் நடத்தி வருகிறார்.இவர் சினிமாக்களில் தற்போது அதிகம் நடிப்பது இல்லை என்றாலும் சொந்த பிஸினஸ்களை கவனித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *