வெற்றி-ஷிவானி நடிப்பில் ‘பம்பர்’

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, படம் விரைவில் வெளியாகிறது

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார்.

தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் மிகவும் சுவாரசியமான முறையில் தயாராகி உள்ளது என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஜி பி முத்து நடிக்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

‘பம்பர்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.

‘பம்பர்’ படத்தின் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *