பில்டர் கோல்ட் திரை விமர்சனம்

திருநங்கைகள் உலகத்தை துணிச்சலாக சொல்லி இருக்கும் படம் பில்டர் கோல்ட் . திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். விஜி கதாபாத்திரத்தில் இயக்குனர் நடித்திருக்கிறார். விஜி கொலை செய்வதில் அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் துணிச்சலுடன் எதிர்க்கும் தைரியம் கொண்டவர். தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு கொலை செய்வதை விஜி தொழிலாக செய்து வருகிறார். அதன் விளைவுகளே மீதிக்கதை.

விஜியாக நடித்துள்ள விஜயபாஸ்கர் முரட்டு சுபாவம் சக தோழிகள் மீது அவர் காட்டும் பாசம், தங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முன்னால் நிற்கும் அடிதடி குணம் என்று மைய பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். டோரா, சாந்தி கதபாத்திரங்களின் இயல்பான நடிப்பு நம்மை அவர்கள் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. சுகு என்ற பாத்திரத்தில் வரும் சிறுவன் பயமுறுத்துகிறான். மரக்கடை முதலாளியாக வரும் சிவ இளங்கோ நல்ல தேர்வு.

முதல் முறையாக தமிழ் சினிமாவில் திருநங்கைகளைப் பற்றிய இவ்வளவு வெளிப்படையான ஒரு படம் வந்ததிருக்கிறது. சமூகத்தில் தங்களைப் புறக்கணிக்கும் மனிதர்கள் மீது கோபத்தில் கொந்தளிக்கும் விஜி, போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டதால் பாதிக்கப்படும் சாந்தி, பெண் உணர்வு தோன்றியதால் வீட்டிலிருந்து விரட்டப்படும் டோரா ஆகியோரின் மன உணர்வுகள் மூலம் ஒட்டு மொத்த திருநங்கைகள் வாழ்வியலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய பாஸ்கர்.

அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் கொச்சையான வார்த்தைகள் மௌனிக்கப்பட்டாலும் அது காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. முழுவதும் திருநங்கைளை வைத்து எடுத்திருந்தாலும் திரைக்கதையில் சுணக்கம் இல்லாமல் கையாண்டு இருக்கிறார் இயக்குனர். சில குறைகள் இருந்தாலும் திருநங்கைகள் உலகத்தைக் காட்டிய இயக்குனர் விஜய் பாஸ்கர் பாராட்டுக்குரியவர். பரணிக்குமார் ஒளிப்பதிவும், ஹூமர் எழிலன் இசையும் சிறப்பு.

மொத்தத்தில் ‘பில்டர் கோல்டு’ – புது உலகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *